தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய Amoris Laetitia திருத்தூது அறிவுரை மடல் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய Amoris Laetitia திருத்தூது அறிவுரை மடல் 

மகிழ்வின் மந்திரம்: நேர்மையான மனச்சான்றுகள் காக்கப்பட...

அரசுகள், கருத்தடை, மற்றும், குடும்பக்கட்டுபாட்டு முறைகளைக் கட்டாயமாகத் திணிக்கும்போது, கருக்கலைப்பிற்கும்கூட ஆதரவு தெரிவிக்கும்போது, திருஅவை அவற்றை உறுதியுடன் எதிர்க்கவேண்டும் (அன்பின் மகிழ்வு 42)

மேரி தெரேசா: வத்திக்கான்    

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் "அன்பின் மகிழ்வு" (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவில், 'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' என்ற பகுதியின், 42வது பத்தியில், பதிவுசெய்துள்ள கருத்துக்கள்....

உலக அரசியலால் ஊக்குவிக்கப்பட்ட, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்கு எதிரான மனநிலையால் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்நிலை, தலைமுறைகளுக்கு இடையேயுள்ள உறவுக்கு உறுதியளிக்காத ஒரு சூழலை உருவாக்குவதோடு, காலப்போக்கில், பொருளாதார வறுமை, மற்றும், வருங்காலம் பற்றிய நம்பிக்கையை இழக்கும் ஆபத்திற்கும் இட்டுச்செல்கின்றது. உயிரித்தொழில்நுட்ப வளர்ச்சியும், பிறப்பு விகிதத்தில் மிகப்பெரும் எதிர்தாக்கத்தைக் கொண்டிருக்கின்றது. தொழில்மயமாக்கல், பாலியல் பற்றிய எண்ணங்களில் உருவாகியுள்ள கட்டுபாடற்ற சுதந்திரம், மக்கள்தொகை பெருக்கம் பற்றிய அச்சம், பொருளாதாரப் பிரச்சனைகள்... போன்ற மற்ற அம்சங்களும், பிறப்பு விகிதம் குறையக் காரணமாக உள்ளன. நுகர்வுப்போக்கின் அதிகரிப்பும், மக்கள், பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதைத் தடுக்கின்றது. பிள்ளைகள் இல்லாமல் இருந்தால், ஒருவகையான சுதந்திரம், மற்றும், வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்கலாம் என்று, மக்கள் கருதுகின்றனர். இத்தகைய காரணங்களால், வாழ்வை வழங்குவதில் தாராளமாக இருக்கும் தம்பதியரின் நேர்மையான மனச்சான்றுகள், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு இட்டுச்செல்லக்கூடும். இத்தகைய மனச்சான்றின் மாண்பை பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே, அரசுகள், கருத்தடை, மற்றும், குடும்பக்கட்டுபாட்டு முறைகளைக் கட்டாயமாகத் திணிக்கும்போது, கருக்கலைப்பிற்கும்கூட ஆதரவு தெரிவிக்கும்போது, திருஅவை அவற்றை உறுதியோடு எதிர்க்கவேண்டும். அரசுகளின் அத்தகைய நடவடிக்கைகள், பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில்கூட ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. அதோடு, பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில்கூட அரசியல்வாதிகள் அதனை ஊக்குவிப்பதைக் காண முடிகிறது. எனவே, தென் கொரிய ஆயர்கள் கூறியிருப்பதுபோன்று, அரசியல்வாதிகளின் இச்செயல், அவர்கள், தங்களது சுயத்திற்கே முரணாகச் செயல்படுவதாகும், மற்றும், அவர்கள், தங்களது கடமையைப் புறக்கணிப்பதாகும் (அன்பின் மகிழ்வு 42).

22 February 2021, 15:04