தேடுதல்

Vatican News
"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" - யோவான் 15:13 "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" - யோவான் 15:13 

மகிழ்வின் மந்திரம் : பெற்றோர் அன்பு, யாரிடமும் இல்லை

பெற்றோரின் வாழ்வில் விளங்கும் ஒரு குறிக்கோளை, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா. 15:13) என்ற அற்புதச் சொற்களில் இயேசு கூறியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

"அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவுக்கு, "இறைவார்த்தையின் ஒளியில்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைப்பிட்டுள்ளார். 23 பத்திகள் அடங்கிய இப்பிரிவில், குடும்பத்தின் உறுப்பினர்களான மனைவி, பிள்ளைகள் ஆகியோரைக் குறித்து முதலில் பேசும் திருத்தந்தை, தொடர்ந்து, குடும்பம் அடையும் துன்பம், குடும்பத்தினர் ஆற்றும் பணிகள் ஆகியவை குறித்து, 8 முதல் 26 முடிய உள்ள 19 பத்திகளில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இந்த முதல் பிரிவின் இறுதி எண்ணமாக "ஓர் அரவணைப்பில் மென்மை" என்ற தலைப்பில் திருத்தந்தை, 27 முதல் 30 முடிய உள்ள நான்கு பத்திகளில், ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இவற்றில், 27ம் பத்தியில் அவர் கூறுவது இதோ:

அன்பின் நியதி, மற்றும் தன்னையே மற்றவருக்குப் பரிசாக வழங்குதல் (காண். மத். 22:39, யோவா. 13:34) என்ற இரு அம்சங்கள், தன் சீடர்களின் தனித்துவமான அடையாளமாக விளங்கவேண்டும் என்று கிறிஸ்து பரிந்துரைத்துள்ளார். தந்தை, தாய் ஆகியோரின் வாழ்வில் விளங்கும் ஒரு குறிக்கோளை, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா. 15:13) என்ற அற்புதச் சொற்களில் இயேசு கூறியுள்ளார். இரக்கம், மற்றும் மன்னிப்பு ஆகிய பண்புகள் வழியே, அன்பு, தன் கனிகளை வழங்குகிறது.

இவ்விரு பண்புகளை, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, கோவிலுக்குக் கொணர்ந்த காட்சியில் காண்கிறோம். அப்பெண், முதலில், அவரைக் கண்டனம் செய்தவர்களால் சூழப்பட்டிருந்தார். பின்னர், அவர், இயேசுவுடன் தனித்திருந்தார். அவ்வேளையில், அப்பெண் கண்டனம் பெறவில்லை; மாறாக, இன்னும் மேலானதொரு வாழ்வைத் தொடர அவர் அறிவுறுத்தப்படுகிறார். (காண். யோவா. 8:1-11) - (அன்பின் மகிழ்வு 27)

02 February 2021, 12:42