தேடுதல்

Vatican News
அடைக்கலம் தேடி அலைவோர் அடைக்கலம் தேடி அலைவோர்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் - புலம்பெயர்தலின் எதிர்மறை விளைவுகள்

புலம்பெயர்வோருடன் உடன் பயணிக்கும் திருஅவை, நாட்டிற்குள்ளேயே தங்கி, துயர்களை அனுபவிப்போர் குறித்தும் மேய்ப்புப்பணித் திட்டங்களை வகுத்துச் செயல்படவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாம் பிரிவில், இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் குறித்து ஒவ்வொன்றாக விவரித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடலின் 46ம் பத்தியில், புலம்பெயர்தல் என்ற பிரச்சனை, எவ்வாறு குடும்பங்கள் உருவாவதில் தடையாக உள்ளது என்பது குறித்து விவரித்துள்ளார்.

குடும்பவாழ்வில் புலம்பெயர்தல் முன்வைக்கும் எதிர்மறை விளைவுகள் குறித்து புரிந்துகொள்ள முயல்வோம். உலகின் பல்வேறு பகுதிகளிலும், புலம்பெயர்தல் என்பது பல்வேறு வகைகளில் மக்களனைவரையும் பாதிக்கிறது என்பதை, ஆயர் மாமன்றத் தந்தையர் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்விடயத்தில் திருஅவை காட்டி வந்துள்ள சாட்சிய வாழ்வு, நிலைநிறுத்தப்பட்டு, மேலும் விரிவுபடுத்தப்படவேண்டிய தேவை, எக்காலத்தையும் விட தற்போது, இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.

போராலும், சித்ரவதைகளாலும், ஏழ்மை, மற்றும் அநீதியான செய்லபாடுகளாலும் குடும்பங்கள் கட்டாயமாக புலம்பெயர தள்ளப்படுவதும், அவர்கள் தங்கள் பயண வழிகளில் சந்திக்கும் துயர்களும், குடும்பங்களைப் பாதிக்கின்றன. இவ்வாறு புலம்பெயர்வோருடன் உடன் பயணிக்கும் திருஅவை, இம்மக்கள் குறித்து மட்டுமல்ல, நாட்டிற்குள்ளேயே தங்கி துயர்களை அனுபவிப்போர் குறித்தும் மேய்ப்புப்பணித் திட்டங்களை வகுத்துச் செயல்படவேண்டும். இந்த மேய்ப்புப் பணித் திட்டங்கள், அம்மக்களின் கலாச்சாரம், மதம், மற்றும் பாரம்பரியம் ஆகிய பின்னணிகளுக்கு மதிப்புக் கொடுப்பதாக வகுக்கப்பட வேண்டியது அவசியம். புலம்பெயர்தல் என்பது சட்டவிரோதமாக, அதிலும், மக்களை வணிகப் பொருட்களாக கடத்தும் பன்னாட்டுக் கும்பல்களின் உதவியுடன் நடத்தப்படும்போது அது குடும்பங்களுக்கு மேலும் பெரும் துன்பங்களைத் தருவதாக உள்ளது. அதிலும் குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் இத்தகையோர் உதவியுடன் குடிபெயரும்போது, பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். தாளமுடியாத வறுமையாலும், குடும்பப் பிளவுகளாலும், சில வேளைகளில், தங்கள் குழந்தைகளையே  விலைமாதர்களாக விற்கவும், அவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்யவும் சில குடும்பங்கள் தள்ளப்படுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, மத்தியகிழக்குப் பகுதியில், கிறிஸ்தவர்களும், மத, இன  சிறுபான்மையினரும், சித்ரவதைகளை அனுபவிப்பது, திருஅவைக்கு மட்டுமல்ல, உலக சமுதாயம் அனைத்திற்கும், துயர் தருவதாகவே உள்ளது. குடும்பங்களும், கிறிஸ்தவ சமுதாயங்களும், தங்கள் சொந்த நாட்டிலேயே மாண்புடன் வாழ்வதற்குரிய வழிகள் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். (அன்பின் மகிழ்வு 46)

26 February 2021, 15:07