தேடுதல்

புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்று புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்று 

மகிழ்வின் மந்திரம் : குடும்பம் உருவாக்கம் பெறுவதற்கு தடை

நீதி, பொருளாதரம், சமுதாயம் போன்றவைகளில் குடும்பங்களுக்கு ஆதரவான கொள்கைகள் வகுக்கப்படுவதைக் கேட்கும் உரிமை குடும்பங்களுக்கு உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 'குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்' என்ற இரண்டாம் பிரிவில், 'இன்றையக் குடும்பத்தின் உண்மை நிலை'  என்ற தலைப்பில், 18 பத்திகளில் (32-49) கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. .குடும்பங்கள் உருவாக்கம் பெறுவதற்கு தடையாக இருக்கும், வீடற்ற நிலை, நல உதவிகளின்மை, வேலைவாய்ப்பின்மை, போன்ற பல உண்மை நிலைகள்  குறித்து தன் 44ம் பத்தியில் விவரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பங்கள் உருவாவதை தள்ளிப் போடுவதில், தங்குமிடமற்ற நிலையும் ஒரு காரணமாக உள்ளது. ஒருகுடும்பம், அதாவது, அதன் அங்கத்தினர்கள் மாண்புடன் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடத்தைக் கொண்டிருக்க உரிமையுடையதாக அது உள்ளது. ஏனெனில், தங்குமிடம் என்பதும், குடும்பம் என்பதும் ஒன்றோடொன்று இணைந்து செல்வதாகும். ஆகவே, இல்லம் எனும் இருப்பிடத்திற்கான உரிமை வலியுறுத்தப்பட வேண்டியதை நாம் அறிவோம். திருஅவை எப்போதும், திருமணங்களையும், குடும்பங்களையும் ஊக்குவிப்பதையும், குறிப்பாக, அவைகளுக்கு அரசுத் திட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடாத இன்றைய காலக்கட்டத்தில், அவைகளைத் தாக்குபவர்களுக்கு எதிராக பாதுகாப்பதையும் தன் மேய்ப்புப் பணியின் ஒரு பகுதியாக கொண்டுள்ளது. நீதி, பொருளாதரம், சமுதாயம் போன்றவைகளில் குடும்பங்களுக்கு ஆதரவான கொள்கைகள் வகுக்கப்படுவதைக் கேட்கும் உரிமை குடும்பங்களுக்கு உள்ளது. ஒரு குடும்பத்தின் அங்கத்தினர் போதிய நல உதவியின்றி நோயால் வாடும்போதோ, மாண்புடன் கூடிய வேலை வாய்ப்பின்றி துயருறும்போதோ,  குடும்பங்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றன. போதிய பொருளாதர வசதியின்றி இருப்பது, குடும்பங்களை கல்வியிலிருந்தும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்தும், சமுதாய வாழ்வு ஈடுபாடுகளிலிருந்தும் தூர விலக்கி வைக்கின்றது. இளையோர் முன்னிலையில் வேலைவாய்ப்பின்மைகளும், நிலையான வேலையின்மைகளும், பாதுகாப்பற்ற வேலைகளுமே இருக்கும்போது, குடும்பங்கள் அதனால் துயர்களை அனுபவிக்கின்றன. வேலை நாட்கள் மிக நீண்டதாகவும், வீட்டிற்கு வரமுடியாத தூரத்திலும் இருப்பது சுமையானதாக மாறுகின்றது.   இதனால், குடும்பங்கள் ஒன்றாகக் கூடி மகிழ்வதற்கும், குழந்தைகளுடன் ஒவ்வொரு நாளும் இருந்து அவர்களோடு உறவாடி வளர்வதற்கும் தடையாக உள்ளது. (அன்பின் மகிழ்வு 44)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2021, 15:34