தேடுதல்

Vatican News
பிப்ரவரி 8 இடம்பெறும் இணையவழி இறைவேண்டல் பக்திமுயற்சி பிப்ரவரி 8 இடம்பெறும் இணையவழி இறைவேண்டல் பக்திமுயற்சி  

பிப்ரவரி 8, மனித வர்த்தகத்திற்கெதிரான இறைவேண்டல்

புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் திருநாளான பிப்ரவரி 8ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக செபம் மற்றும், மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 8, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும், மனித வர்த்தக ஒழிப்பு இறைவேண்டல், மற்றும், மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வின் ஏழாவது உலக நாளன்று நடைபெறும் இணையவழி தொடர் இறைவேண்டலில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெறுமாறு, உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பு ஒன்று, அழைப்பு விடுத்துள்ளது.

உலக அளவில், மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக கடுமையாய் முயற்சித்துவரும், தலித்தா கும் (Talitha Kum) எனப்படும் உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பு,  வருகிற திங்கள் காலை பத்து மணி முதல், மாலை ஐந்து மணி வரை இறைவேண்டல் பக்திமுயற்சி ஒன்றை நடத்துகிறது.

இந்த இறைவேண்டல் நாளில், மனித வர்த்தகத்தில் இடம்பெறும் அனைத்துவிதமான முறைகேடுகளை எதிர்க்கும், புதியதொரு பொருளாதாரத்தை ஊக்குவித்து வளர்ப்பது பற்றி சிந்திக்குமாறு, இந்த அமைப்பு, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக இறைவேண்டல், மற்றும், அது பற்றிய விழிப்புணர்வின் ஏழாவது உலக நாள், “மனித வர்த்தகம் இல்லாத ஒரு பொருளாதாரம்” என்ற மையக்கருத்துடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

மனித வர்த்தகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ள, பொருளாதார ஆதிக்கம், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், கூடுதலாக வலுவடைந்துள்ளது என்று, தலித்தா கும் அமைப்பு, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் திருநாளான பிப்ரவரி 8ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக இறைவேண்டல், மற்றும், மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இப்புனிதர், அடிமைமுறை ஒழிப்புக்கு எதிராக, திருஅவை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளார்.

தலித்தா கும் அமைப்பானது, துறவு சபைகள் தலைவர்களின் உலகளாவிய அமைப்புகளின் (UISG-USG) ஓர் அங்கமாகும். தலித்தா கும் அமைப்பு, தற்போது 92 நாடுகளில் பணியாற்றி வருகின்றது.

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனம், மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளை, ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதியன்று கடைப்பிடிக்கின்றது. 

06 February 2021, 15:44