தேடுதல்

Vatican News
அணு ஆயுதங்கள் அணு ஆயுதங்கள்   (©Scanrail - stock.adobe.com)

TPNWவிற்கு கத்தோலிக்கத் தலைவர்கள் வரவேற்பு

உலக அளவில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய அனைத்து ஆயுதங்களும் நன்னெறிக்குப் புறம்பானவை என்றும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களின் கருத்து வாக்கெடுப்பு கூறுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 22, இவ்வெள்ளியன்று, நடைமுறைக்கு வந்துள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW) குறித்த தங்கள் மகிழ்வையும், வரவேற்பையும் வெளியிட்டுள்ளனர், உலகளாவிய கத்தோலிக்கத் தலைவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை செயல்படுத்துவதன் வழியாக, ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், தங்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பது, தங்களுக்கு ஊக்கமளிக்கின்றது என்று கூறியுள்ள கத்தோலிக்கத் தலைவர்கள், 2017ம் ஆண்டில், இந்த ஒப்பந்தத்தில், முதன்முதலாக இணைந்த நாடுகளில் ஒன்றாக திருப்பீடம் இருப்பது, பொருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

உலக அளவில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய அனைத்து ஆயுதங்களும் நன்னெறிக்குப் புறம்பானவை என்றும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களின் கருத்து வாக்கெடுப்பு கூறுகின்றது என்றுரைத்துள்ள அத்தலைவர்கள், இப்போது அந்த ஆயுதங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் கூறியுள்ளனர்.  

அணு ஆயுதக்களைவுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்திருக்கும் அழைப்பிற்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும், இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள எங்களில், பலரின் நாடுகளில், அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன, இவற்றிற்கு எதிராய் குரல் எழுப்பவேண்டியது, எங்களது கடமை என்றும், அத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்ட்ரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பெல்ஜியம், நியூசிலாந்து, கனடா, கொலம்பியா, பிரான்ஸ், பிரிட்டன், ஹாலந்து, இஸ்ரேல், காங்கோ சனநாயக குடியரசு, ஜெர்மனி, கென்யா, பெரு, ருவாண்டா, தென் கொரியா, இஸ்பெயின், டான்சானியா, டோகோ போன்ற நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

22 January 2021, 15:17