தேடுதல்

Capitol மையத்தில் தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் Capitol மையத்தில் தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் 

Capitol தாக்குதல்களுக்கு WCC கடும் கண்டனம்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், வன்முறையைத் தூண்டியவர்கள் மற்றும், அதில் பங்கேற்றவர்கள், நாடு எதிர்நோக்கும் தற்போதைய சீர்குலைவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் – உலக கிறிஸ்தவ சபைகள் மாமன்றம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol மீது கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, அந்நாட்டிற்கு, வருங்கால அமைதிப் பாதையைச் சுட்டிக்காட்டுமாறு, கிறிஸ்தவ சபைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது, WCC எனப்படும், உலக கிறிஸ்தவ சபைகள் மாமன்றம்.

வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள Capitol பாராளுமன்ற கட்டடத்தின் மீது அதிபர் டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தின் மத்தியில் வாழ்ந்துவரும் அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளுக்கு, தனது ஆதரவையும் வெளியிட்டுள்ளது, உலக கிறிஸ்தவ சபைகள் மாமன்றம்.

உலக கிறிஸ்தவ சபைகள் மாமன்றத்தின் இடைக்கால தலைமைப் பொதுச்செயலர் Ioan Sauca அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதியுள்ள மடலில், அரசியல் தலைவர்களின் அதிகார ஆசை, பொது நலனை விஞ்சி நிற்கையில், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இனப்பாகுபாட்டிற்கும், சமமாண்பு மற்றும், உரிமைகள் மீறப்படுவதற்கும் எதிராக, அந்நாட்டின் பல்வேறு கிறிஸ்தவத் தலைவர்கள், காலம் காலமாக வெளிப்படுத்திவரும் சான்றுவாழ்வையும், Sauca அவர்கள் பாராட்டியுள்ளார்.

நீதி மற்றும், அமைதியை நோக்கிய முயற்சியில், புரிந்துணர்வு மற்றும், பரிவன்புப் பாதையில் கடவுள் நம்மை வழிநடத்துவாராக என்றும், Sauca அவர்கள் தன் மடலில் கூறியுள்ளார்.

மேலும், அந்நாட்டில், சனவரி 6ம் தேதியன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்கு எதிராக, கடுமையான சொற்களால் கண்டனம் தெரிவித்துள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் தலைமை பொதுச் செயலரான Jim Winkler அவர்கள், இந்த தாக்குதல்கள் வெட்கத்துக்குரியவை மற்றும், ஏற்றக்கொள்ளப்பட முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டில், சட்டத்தால் ஒழுங்கமைவைக் கொணர்வதற்கு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், இந்த வன்முறையைத் தூண்டியவர்கள் மற்றும், அதில் பங்கேற்றவர்கள், நாடு எதிர்நோக்கும் இந்த சீர்குலைவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், Jim Winkler அவர்கள் கூறியுள்ளார்.

13 January 2021, 14:43