தேடுதல்

Vatican News
கத்தோலிக்கரான ஜோ பைடன், மற்றும், துணைவியார் ஜில் பைடன் கத்தோலிக்கரான ஜோ பைடன், மற்றும், துணைவியார் ஜில் பைடன்  (AFP or licensors)

60 ஆண்டுகளுக்குப்பின், அரசுத்தலைவராகும் கத்தோலிக்கர்

கத்தோலிக்க மத நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது, அவருடன் இணைந்து பணியாற்றுவது இன்னும் சிறிது எளிதாகிறது - பேராயர் கோமஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திருவாளர் ஜோசப் பைடன் அவர்களுடனும், அவரது ஏனைய அதிகாரிகளுடனும், நன்மைதரும் முறையில் பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் சனவரி 20 இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மிகவும் கடினமான ஒரு காலக்கட்டத்தில், இந்நாட்டை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள ஜோ பைடன் அவர்களுக்கு, இறைவன், மிகுதியான ஞானத்தையும் சக்தியையும் வழங்க தான் இறைவேண்டல் செய்வதாக, பேராயர் கோமஸ் அவர்கள் இவ்வறிக்கையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் மட்டுமல்லாமல், இன்னும் சில அரசியல், சமுதாய, கலாச்சார பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயத்தை ஒருங்கிணைத்து, காயங்களை குணமாக்குவது, ஜோ பைடன் அவர்கள் சந்திக்கும் முதல் சவால் என்று பேராயர் கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

60 ஆண்டுகளுக்குப்பின் வெள்ளை மாளிகையில் கத்தோலிக்கர் ஒருவர் குடியேறுகிறார் என்பதை, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் கோமஸ் அவர்கள், கத்தோலிக்க மத நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது, அவருடன் இணைந்து பணியாற்றுவது இன்னும் சிறிது எளிதாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உண்மைகளை, எப்போதும், அனைவரும், ஏற்றுக்கொள்வது கடினமானது என்றாலும், வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், அவ்வுண்மைகளை, பறைசாற்றுவதில் அரசுத்தலைவர் கருத்தாய் இருக்கவேண்டும் என்று, பேராயர் கோமஸ் அவர்கள், தன் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டிய முக்கிய இடத்தையும், கருக்கலைத்தல் போன்ற விவகாரங்களில், கத்தோலிக்க படிப்பினைகள், மற்றும் நல்மனம் கொண்டோர் அனைவரின் படிப்பினைகளுக்கு தரப்படவேண்டிய இடத்தையும் அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்பதையும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான, லாஸ் அஞ்செலஸ் பேராயர் ஜோஸ் கோமஸ் அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, அமெரிக்க மக்களிடையே நிலவும் கவலைகளையும், நம்பிக்கைகளையும் அன்னை மரியாவின் பாதத்தில் சமர்ப்பித்து, அவர், புதிய அரசுத்தலைவரையும், அமெரிக்க மக்களையும் வழிநடத்தவேண்டும் என்ற இறைவேண்டலுடன், பேராயர் கோமஸ் அவர்கள், தன் அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

21 January 2021, 14:58