தேடுதல்

Capitol மீது தாக்குதல்கள் Capitol மீது தாக்குதல்கள் 

வாஷிங்டன் தாக்குதல்கள்: அமெரிக்க ஆயர்கள் கண்டனம்

இதுவரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில், தேர்தல் முடிவுகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு, அரசுத்தலைவர்கள் தங்கள் பதவியை அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்து வந்துள்ளனர் - பேராயர் கோமஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 6, இப்புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, அந்நாட்டு ஆயர்கள், ஒரே மனதுடன், வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.

ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் ஹோஸே கோமஸ்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகத்தில் வன்முறையாளர்கள் நுழைந்து நடத்திய தாக்குதல்களை, அனைத்து நல்மனம் கொண்டோருடன் இணைந்து நாங்கள் கண்டனம் செய்கிறோம் என்ற சொற்களுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதுவரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில், தேர்தல் முடிவுகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு, அரசுத்தலைவர்கள் தங்கள் பதவியை அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்து வந்துள்ளனர் என்று கூறிய பேராயர் கோமஸ் அவர்கள், தற்போது நடைபெற்றுவருவது, குடியரசு என்ற கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது என்று கூறினார்.

நன்னெறி விழுமியங்களும், கொள்கைகளும் கேள்விக்குறியாக மாறியுள்ள இவ்வேளையில், நாம் அனைவரும், கடவுளின் பெயரால் ஒருங்கிணைந்து வருவதும், குடியரசின் மாண்பை நிலைநிறுத்துவதும் முக்கியம் என்று, பேராயர் கோமஸ் அவர்கள் தன் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளார்.

வாஷிங்டன் பேராயர், கர்தினால் வில்டன் கிரகரி

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகம் அமைந்துள்ள வாஷிங்டன் பெரு மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் வில்டன் கிரகரி அவர்கள், வாஷிங்டன் நகரின் சதுக்கம், பல்வேறு கருத்து வேறுபாடுகள் நாகரீகமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இடம் என்பதை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து வேறுபாடுகளின் நடுவிலும், மதிப்புடன் விளங்கிய இந்நகரின் நாகரீகம் மிகுந்த பாரம்பரியம், ஒரு சில வன்முறையாளர்களால் இன்று சீரழிக்கப்பட்டுள்ளது என்று கூறிய கர்தினால் கிரகரி அவர்கள், இவ்வேளையில், குடியரசின் நெறிமுறைகளை நிலைநாட்ட பாடுபட்டு வரும் அரசியல் பிரதிநிதிகள், காவல்துறையினர் மற்றும் அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், மனசாட்சியுள்ள குடிமக்களையும், உண்மையான கத்தோலிக்கரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் என்று, சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich அவர்கள் தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

குடியரசின் இலக்கணமாகத் திகழ்ந்துவந்த அமெரிக்க ஐக்கிய நாட்டில், கடந்த பல மாதங்களாக, குடியரசின் மாண்பு சிதைக்கப்பட்டு வந்துள்ளது என்று கூறிய கர்தினால் Cupich அவர்கள், பொய்மையை உண்மையாக்க மேற்கொள்ளப்படும் வன்முறை, மிகவும் கேவலமானது என்று கண்டனம் செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2021, 15:45