தேடுதல்

அணு ஆயுத சேமிப்பைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு அணு ஆயுத சேமிப்பைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு 

“New Start” ஒப்பந்தக் கெடு நீட்டிக்கப்படுமாறு அழைப்பு

சனவரி 22ம் தேதி உலக அளவில் நடைமுறைக்கு வருகின்ற அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை, திருப்பீடம் செயல்படுத்துவது, அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுள்ள அர்ப்பணத்தை நினைவுபடுத்துகின்றது - ஆயர் Malloy

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆட்சியும், அரசுத்தலைவரும் மாறவிருக்கும் இக்காலக்கட்டத்தில், அணு ஆயுத சேமிப்பைக் கட்டுப்படுத்தும் “New Start” எனப்படும் ஒப்பந்தக் கெடுவை நீட்டிக்குமாறு, அந்நாட்டு ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி மற்றும், அமைதி பணிக்குழுவின் தலைவரான ஆயர் David J. Malloy அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள, அணு ஆயுத சேமிப்பைக் கட்டுப்படுத்தும் “New Start” எனப்படும் ஒப்பந்தக் கெடு, வருகிற பிப்ரவரி 5ம் தேதி முடியவுள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஆயர் Malloy அவர்கள், மிகவும் ஆபத்தான அணு ஆயுதங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு, இந்த ஒப்பந்த நீட்டிப்பு இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.

உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் எண் 6ல் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, “New Start” ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது மிகவும் அவசியமானது என்று கூறியுள்ள ஆயர் Malloy அவர்கள், ஹிரோஷிமா மற்றும், நாகசாகி நகரங்களில், அணுகுண்டுகள் போடப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, 2020ம் ஆண்டில் நினைவுகூரப்பட்டபோது, உலகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி ஆயர்கள் எடுத்துரைத்தனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சனவரி 22ம் தேதி, அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உலக அளவில் நடைமுறைக்கு வரவுள்ளதையும் குறிப்பிட்டுள்ள ஆயர் Malloy அவர்கள், இந்த தடை ஒப்பந்தத்தை, திருப்பீடம் நடைமுறைப்படுத்தவது, உலக அளவில் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை தன்னை அர்ப்பணித்திருப்பதை நினைவுபடுத்துகின்றது என்றும் கூறியுள்ளார்.

“New Start” ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு வலியுறுத்தியுள்ள ஆயர் Malloy அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் அவர்கள், அணு ஆயுதக் களைவு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முதன்மை இடம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2021, 15:25