தேடுதல்

Vatican News
பிரித்தானியாவில் கோவிட்-19  தடுப்பூசி பிரித்தானியாவில் கோவிட்-19 தடுப்பூசி  (AFP or licensors)

இங்கிலாந்தில் 1,00,000 மரணங்கள் – ஆயர்களின் விண்ணப்பம்

இங்கிலாந்தில் வாழும் மத நம்பிக்கையுடையோர், மற்றும் மத நம்பிக்கை அற்றோர் அனைவரும், பிப்ரவரி 1ம் தேதி முதல், ஒவ்வொரு நாளும், மாலை 6 மணிக்கு ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கி, செபிக்குமாறு விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இங்கிலாந்து நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இறந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ள வேளையில், அந்நாட்டின் கர்தினால், மற்றும், ஆங்கிலிக்கன் சபையைச் சேர்ந்த கான்டர்பரி மற்றும் வேல்ஸ் பேராயர்கள், ஆகியோர், மக்களுக்கு விண்ணப்பங்களை விடுத்துள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் (Vincent Nichols), கான்டர்பரி பேராயர், ஜஸ்டின் வெல்பி (Justin Welby), வேல்ஸ் பேராயர், ஸ்டீபன் கோட்ரெல் (Stephen Cottrell) ஆகியோர் வெளியிட்டுள்ள விண்ணப்பங்களில், பிரித்தானியாவில் நிலவும் இந்த பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள, மக்கள் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, சாவு இறுதியான உண்மை அல்ல, என்பதையும், நமது துயரங்களையும், வேதனைகளையும் நன்கு அறியும் கடவுள், நம் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார் என்பதையும் உணர்ந்து, இறைவேண்டல் புரியுமாறு பேராயர்கள் இம்மடலில் கூறியுள்ளனர்.

இந்த பெருந்தொற்றினால் வறியோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இதுவரை அடைந்துள்ள, இன்றும் அடைந்துவரும் துன்பங்களை நினைவுகூர்ந்து நமது இறைவேண்டல்களும், செயல்பாடுகளும் அமையவேண்டும் என்று பேராயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இறந்துள்ள 1 இலட்சம் பேர் என்பது, வெறும் எண்ணிக்கை அல்ல, அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் கர்தினால் நிக்கோல்ஸ், பேராயர்கள் வெல்பி, மற்றும் கோட்ரெல் ஆகியோர், இறந்தவர்கள் அனைவரும், இறைவனின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வாழும் மத நம்பிக்கையுடையோர், மற்றும் மத நம்பிக்கை அற்றோர் அனைவரும், பிப்ரவரி 1ம் தேதி முதல், ஒவ்வொரு நாளும், மாலை 6 மணிக்கு ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கி, இந்த பெருந்தொற்றின் விளைவுகளை அகற்ற இறைவேண்டல் செய்யுமாறு, பேராயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (ICN)

28 January 2021, 15:29