அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், வரலாற்று மைல்கல்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், இம்மாதம் 22ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளவேளை, பிரித்தானியா, அணு ஆயுத சேமிப்பை ஒழிக்கவேண்டும் என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.
2021ம் ஆண்டு சனவரி 22, வெள்ளியன்று உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW) நடைமுறைக்கு வரவுள்ளது குறித்து, சனவரி 11, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள பிரித்தானிய ஆயர்கள், இந்த ஒப்பந்தம், அணு ஆயுதக் களைவை நோக்கிய பாதையில், ஒரு வரலாற்று மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கலந்துரையாடல், நீதி, மனித மாண்பை மதித்தல், நம் பூமிக்கோளத்தைப் பராமரித்தல் ஆகியவற்றில் வேரூன்றிய, உண்மையான அமைதியைக் கட்டியெழுப்புவதில் உலக சமுதாயம் தன் மீள்பார்வையை செலுத்துவதற்கு, இந்த ஒப்பந்தம், நல்லதொரு வாய்ப்பு என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
பெருமளவில் அழிவைக்கொணரும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தல், அவற்றைப் பாதுகாத்தல், மற்றும், அவற்றை நவீனப்படுத்தல் ஆகியவற்றுக்குச் செலவழிக்கப்படும் நிதி, நம் சமுதாயத்தின் வறியோர், மற்றும், புறக்கணிக்கப்பட்டோரின் துன்பங்களை அகற்றவும், அனைத்து மக்களின் பொதுநலனைக் காக்கவும் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், பிரித்தானிய ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2020ம் ஆண்டு அக்டோபரில் கொண்டூராஸ் நாடு, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம், உலக அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான எண்ணிக்கை ஐம்பது கிடைத்துள்ளது
இம்மாதம் 22ம் தேதி, வெள்ளியன்று, நடைமுறைக்கு வரும் இந்த உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களை மேம்படுத்துதல், சேமித்தல், பரிசோதனை செய்தல், அவற்றைப் பயன்படுத்தவிருப்பதாக அச்சுறுத்தல் உட்பட அணு ஆயுதங்களோடு தொடர்புடைய அனைத்தும் தடைசெய்யப்படுகின்றன.
உலக அளவில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கொணரப்படுவதற்கு, ஐக்கிய நாடுகளின் பொது அவை, 2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இசைவு தெரிவித்தது. அதே ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, நாடுகளின் கையெழுத்திற்கு விடப்பட்டது. அதே நாளில், நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் கையெழுத்திட்டார்.