தேடுதல்

Vatican News
புத்தாண்டு 2021 புத்தாண்டு 2021  (ANSA)

தமிழக ஆயர் பேரவையின் 2021ம் புத்தாண்டு செய்தி

நம் இதயங்களில் நம்பிக்கையும், நம் கண்களில் இலக்குத்தெளிவும், நம் கரங்களில் மற்றவர் கரங்களின் உடனிருப்பும் இருந்தால், புதிய 2021ம் ஆண்டை இனிய ஆண்டாக நம்மால் மாற்ற முடியும் - தமிழக ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் இதயங்களில் நம்பிக்கையும், நம் கண்களில் இலக்குத்தெளிவும், நம் கரங்களில் மற்றவர் கரங்களின் உடனிருப்பும் இருந்தால், புதிய 2021ம் ஆண்டை இனிய ஆண்டாக நம்மால் மாற்றமுடியும் என்று, தமிழக ஆயர்களின் புத்தாண்டு செய்தி கூறுகிறது.

தமிழக ஆயர் பேரவையின் தலைவரான, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், தமிழக ஆயர்கள் சார்பாக வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில், இந்த 2021ம் ஆண்டு முழுவதும் நாம் கைக்கொள்ளவேண்டிய இரு நற்புண்புகளாக, தனிநபர் வாழ்வியல் நெறியாளுகை, சமுதாயக் கூட்டுப்பொறுப்புணர்வு ஆகிய இரண்டையும் ஏற்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிநபர் வாழ்வியல் நெறியாளுகையில், நாம் நம்முடைய கடந்த காலத்தின் பின்புலத்தில், வருங்காலத்திற்கு திட்டங்களை வரையறுத்து வடிவமைக்க முடியும் என்றும், சமுதாயக் கூட்டுப்பொறுப்புணர்வின் வழியாக, ஒருவர் மற்றவருடன் இணைந்து செயலாற்றமுடியும் என்றும், பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் செய்தி கூறுகிறது.

நம் கரங்கள், நமக்கு அடுத்திருப்பவரின் கரங்களையும், நம் இருவரின் கரங்களும் இணைந்து, கடவுளின் கரங்களையும் பற்றிக்கொண்டால், 2021ம் ஆண்டில் நாம் மேற்கொள்ளும் வாழ்வுப் பயணம் இனிதாக அமையும், ஏனெனில் தனியாக இருந்து எவரும் எதையும் சாதிப்பதில்லை என்றும், பேராயரின் புத்தாண்டு செய்தி கூறுகிறது.

பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர், பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை போன்ற பல்வேறு சோகத்தின் சுவடுகளை, 2020ம் ஆண்டு, நம்மிலும், இந்த உலகம் எங்கிலும் விட்டுச்சென்றாலும், நம் கரங்கள் இணைந்தால், மானுடம் வெல்லும் என்ற வாழ்வியல் பாடத்தையும், அது கற்றுத்தந்துள்ளது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறைவானவற்றைக்கொண்டு நிறைவாக வாழ்தல், தனிநபர் நலவாழ்வைப் பேணுதல், புதியத் தொழில்முறைகளை உருவாக்குதல், கூட்டுமுயற்சியுடன் செயலாற்றுதல் போன்ற, பல நேர்முகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ள 2020ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2021ம் ஆண்டில் நாம் நுழைந்துள்ளோம் என்றும், தமிழக ஆயர் பேரவை தலைவரின் புத்தாண்டு செய்தி கூறுகின்றது. (Ind.Sec/Tamil)

02 January 2021, 14:57