தேடுதல்

இறைவார்த்தை ஞாயிறு இறைவார்த்தை ஞாயிறு  

இறைவார்த்தை ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இறைவார்த்தை ஞாயிறு வழிபாட்டில், நற்செய்தியைப் பறைசாற்ற வந்த இறைவாக்கினர் யோனாவையும், இயேசுவையும் மையப்படுத்தி நம் சிந்தனைகளை மேற்கொள்கிறோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

இறைவார்த்தை ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

தவளைக் கூட்டமொன்று காட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென, அக்கூட்டத்திலிருந்த மூன்று தவளைகள் ஒரு குழிக்குள் தவறி விழுந்துவிட்டன. இதைக் கண்ட மற்ற தவளைகள், அந்தக் குழியைச் சுற்றி நின்று கீழே பார்த்தபோது, குழி மிகவும் ஆழம் என்பதை உணர்ந்தன. குழிக்குள் விழுந்த மூன்று தவளைகளும் மீண்டும் மேலே வரும் முயற்சியில் குதிக்க ஆரம்பித்தன. அவை எவ்வளவு முயன்றும், அந்தக் குழியின் ஆழத்தைத் தாண்டி, வெளியில் வருமளவு குதிக்க முடியவில்லை.

இந்தப் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற தவளைகள், ஒன்று சேர்ந்து, கத்த ஆரம்பித்தன. "நீங்கள் என்னதான் முயன்றாலும் வெளியே வரமுடியாது. எனவே, அங்கேயே தங்கிவிடுங்கள்" என்று தவளைகள் அனைத்தும் சேர்ந்து கத்தின. அந்தக் கத்தலையும் மீறி, மூன்று தவளைகளும் தொடர்ந்து குதித்தன. அவற்றில் இரு தவளைகள், விரைவில் சோர்வுற்று, மற்ற தவளைகள் கத்தியதற்கு ஏற்ப, குதிப்பதை நிறுத்திவிட்டன.

மூன்றாவது தவளை மட்டும், இன்னும் அதிக முயற்சியுடன் மேலே குதித்து, குழியைவிட்டு வெளியேறியது. இதைக்கண்ட மற்ற தவளைகள், "குதிக்கவேண்டாம் என்று நாங்கள் அவ்வளவு கத்தியும், நீ ஏன் கேட்கவில்லை?" என்று கோபமாகக் கேட்டன. அப்போது அந்தத் தவளை, "எனக்கு காது சரியாகக் கேட்காது. எனவே, நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் கத்துகிறீர்கள் என்றெண்ணி, இன்னும் அதிகமாக முயற்சி செய்தேன்" என்று புன்சிரிப்புடன் சொன்னது.

வார்த்தைகள், ஆக்கவும், அழிக்கவும் வலிமை வாய்ந்தவை. "தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்ற குறள் வழியே, வார்த்தைகளின் வலிமையைப் பற்றி வள்ளுவர் நமக்கு உணர்த்தியிருக்கிறார். மனித வார்த்தைகளுக்கே இவ்வளவு வலிமை என்றால், இறைவார்த்தைக்கு உள்ள வலிமையை என்னென்பது?

ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டு, பொதுக்காலத்தின், மூன்றாம் ஞாயிறை, இறைவார்த்தை ஞாயிறு என்று கொண்டாடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். சென்ற ஆண்டு முதல் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்த இறைவார்த்தை ஞாயிறன்று, வார்த்தைகள், அவற்றைக்கொண்டு உருவாக்கப்படும் செய்திகள், நற்செய்தி என்ற வரிசையில் நம் சிந்தனைகளை மேற்கொள்ள இன்றைய வாசகங்கள் உதவியாக இருக்கின்றன.

ஒவ்வோருநாளும், உலகெங்கும் நிகழும், கோடிக்கணக்கான உன்னத நிகழ்வுகள், செய்திகளாவதில்லை. ஆனால், ஆயிரத்தில் ஒன்றாக, ஆங்காங்கே நடக்கும் அவலங்கள், செய்திகளாக மாறிவிடுகின்றன. நல்ல செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு, மோசமான செய்திகளை வெளியிடுவதில், ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றன. அத்தகையச் செய்திகளையே “மக்கள் விரும்புகிறார்கள்” என்று கூறி, ஊடகங்கள், தங்கள் தவறை நியாயப்படுத்துகின்றன. இச்செய்திகள் வழியே, ஊடகங்கள் ஒவ்வொருநாளும் காட்டும் இருளான உலகை எதார்த்தம் என்று நம்பி, நம்பிக்கையிழந்து போகிறோம். ஊடகங்கள் தரும் செய்திகள், பெரும்பாலும் அழிவையே அதிகமாய் பேசுவதால், அந்தத் தவளையைப்போல், செவித்திறனற்று வாழ்வது நல்லதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில், அரசின் அடிமைகளாக செயல்படும் ஊடகங்கள், நல்ல பல செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன என்பதற்கு, டில்லியைச் சுற்றி நிகழும் வேளாண் பெருமக்களின் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதேவண்ணம், தங்கள் செய்தி நிறுவனத்தின் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டி, அதன் பயனாக, விளம்பரங்களை வளைத்துப்போடுவதற்கு, ஊடகங்கள் பின்பற்றும் மனசாட்சியற்ற வழிகள் பல உள்ளன. உண்மைகளைத் திரித்து, பரபரப்பான செய்திகளாக மாற்றுதல், செய்திகளை முதலில் தரவேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு சில வன்முறைகளைத் தூண்டிவிடுதல் போன்ற மனசாட்சியற்ற வழிகள் அவை.

ஊடகங்கள் நம்மீது திணிக்கும் அவலங்கள் போதாது என்று, நம் கைவசம் இருக்கும் 'whatsapp' போன்ற செயலிகள் வழியே, நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளை நாமும் பகிர்ந்துவருகிறோம். நம் செல்லிடப்பேசிக்கு வரும் செய்திகள், உண்மையான செய்திகளா, வதந்திகளா என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்யாமல்,  அந்த பரபரப்பு குறைவதற்குமுன், அதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளையும், வதந்திகளையும், பகிர்ந்துவருகிறோம். குறிப்பாக, கடந்த ஓராண்டளவாக, நம் இல்லங்களில் நாம் சிறைப்படுத்தப்பட்ட வேளைகளில், இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் எத்தனையோ பாதகமான விளைவுகளை உருவாக்கின என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இத்தகைய ஒரு பின்னணியில், இன்று நாம் கொண்டாடும் இறைவார்த்தை ஞாயிறு வழிபாட்டில், நற்செய்தியைப் பறைசாற்ற வந்த இறைவாக்கினர் யோனாவையும், இயேசுவையும் மையப்படுத்தி நம் சிந்தனைகளை மேற்கொள்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், (யோனா 3: 1-5, 10) “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்று இறைவாக்கினர் யோனாவை ஆண்டவர் அனுப்புகிறார். அவர் சொல்லி அனுப்பும் செய்தி என்ன? “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்.”

இன்றைய நற்செய்தி வாசகம், யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார் (மாற்கு 1:14-15) என்ற சொற்களுடன் துவங்குகிறது.

யோனாவுக்கு இறைவன் தந்த செய்தி, இயேசு பறைசாற்றிக் கொண்டே வந்த கடவுளின் நற்செய்தி இவ்விரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால், இவை நல்ல செய்திகள் போலத் தெரியவில்லை. ‘நினிவே அழியப்போகிறது’ என்ற செய்தியும், ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளும் நல்ல செய்திகளா? ஆம், இவை நல்ல செய்திகள். நற்செய்தியைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் செய்திகள்.

‘நற்செய்தி’ என்ற சொல், கிரேக்க மொழியில் Euangelion என்று கூறப்படுகிறது. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய “Jesus of Nazareth” என்ற நூலில் Euangelion என்ற கிரேக்க வார்த்தைக்கு அவர் தரும் விளக்கம், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது:

“Euangelion என்ற வார்த்தையை நாம் 'நற்செய்தி' அதாவது, 'நல்ல செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். இந்த மொழி பெயர்ப்பு நமக்கு இதமாகத் தெரிகிறது. ஆனால், Euangelion என்ற கிரேக்கச் சொல்லின் முழுமையான பொருளைப் புரிந்துகொள்ள, 'நல்ல செய்தி' என்ற மொழிபெயர்ப்பு உதவியாக இல்லை.  

“Euangelion என்ற வார்த்தை, உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய வார்த்தை. இப்பேரரசர்கள், மக்கள் மீது, முழு அதிகாரம் கொண்டவர்களாக, மக்களையும், இந்த உலகையும் காப்பவர்களாக, தங்களையே எண்ணிவந்தனர். அவர்கள் தந்த செய்திகள் எல்லாமே Euangelion என்று சொல்லப்பட்டது. அச்செய்தி, மகிழ்வான, இதமான செய்தியாக இருந்ததா என்பது கணக்கில்லை. அது, பேரரசரிடமிருந்து வந்த செய்தி என்பதால், பாதுகாக்கும் சக்தி பெற்றதென்று கருதப்பட்டது. அது, வெறும் தகவல்களைத் தரும் செய்தி அல்ல. மாறாக, உலகை மாற்றக்கூடிய, அதிலும், உலகை உயர்ந்ததொரு நிலைக்கு மாற்றக்கூடிய வலிமை பெற்ற செய்தி என்று கருதப்பட்டது.

“உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய Euangelion என்ற கிரேக்கச் சொல்லை நான்கு நற்செய்தியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் எழுதியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாம் நான்கு நற்செய்திகள் என்று குறிப்பிடுகிறோம். தன்னை ஒரு கடவுளாக, மனிதர்களைக் காப்பவராக தவறாக எண்ணி வந்த உரோமையப் பேரரசன் பயன்படுத்திய Euangelion என்ற சொல், இயேசுவில் தன் முழுமையானப் பொருளைக் கண்டது.

“நாம் இன்று பயன்படுத்தும் ஒரு சில சொற்றொடர்களை Euangelion என்ற வார்த்தையை விளக்க நாம் பயன்படுத்தலாம். தகவலைப் பரிமாற நாம் பயன்படுத்துவது, informative speech. செயல்படத் தூண்டும்வண்ணம் நாம் பேசுவது, performative speech. விவிலியத்திலிருந்து நாம் கேட்கும் ‘நற்செய்திகள்’, நம்மைச் செயல்படத் தூண்டும் செய்திகள்” என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ‘நற்செய்தி’ என்ற வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நற்செய்தி என்ற சொல்லில் நல்ல+செய்தி என்ற இரு வார்த்தைகள், இணைந்துள்ளதைக் காணலாம். 'நல்ல செய்தி' என்றதும், இதமான, மகிழ்வான செய்தி என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. நம்மை வந்தடையும் நற்செய்தி, பல நேரங்களில், இதமான, மகிழ்வான செய்தியாக இருக்காது. 'நினிவே அழியப்போகிறது' என்பது, எப்படி இதமான, மகிழ்வான செய்தியாக இருக்கமுடியும்? ஆனால், நற்செய்தி என்ற சொல்லுக்கு, நன்மை விளைவிக்கும் செய்தி என்று பொருள் கொண்டால், அதன் முழு அர்த்தமும் விளங்கும். இந்த கோணத்தில் பார்த்தால், ‘நினிவே அழியப்போகிறது’ என்று யோனா குரல் எழுப்பிக் கூறியதும், அந்நகர மக்கள் விழித்தெழுந்தனர். யோனா வழங்கிய அந்தக் கொடூரமான செய்தி, அந்நகரைக் காப்பாற்றியது. எனவே, அது நல்ல செய்தியானது. இவ்வாறு சொல்லப்படும் செய்திகள், கத்தியை நினைவுபடுத்துகின்றன.

அறுவைச் சிகிச்சையில், அல்லது சமையலறையில் நாம் பயன்படுத்தும் கத்திகள், குத்தும், வெட்டும், கிழிக்கும். ஆனால், இறுதியில், அந்தக் கத்திகள், நன்மைகளை உருவாக்கும். இந்தப் பொருளில்தான், இறைவார்த்தை, “இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது” (எபிரேயர் 4: 12) என்று எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

‘நற்செய்தி’ அல்லது ‘நல்ல செய்தி’யில், இரண்டாவது சொல், ‘செய்தி’. இங்கு ‘செய்தி’ என்ற சொல், வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. செயல்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் செய்திகள் இவை. மிகத் துரிதமாக தொடர்புகள் நடைபெறும் இந்தக் காலத்தில், நொடிக்கு நூறு செய்திகள் என்ற அளவில், நமது வாழ்வை, செய்திகள் நிரப்பிவிடுவதால், அவை நம்மைச் செயலிழக்கச் செய்துள்ளன. குறிப்பாக, கோவிட்-19 என்ற கிருமியைப் பற்றிய, உண்மையான, அரைகுறையான, பொய்யான செய்திகள், ஓராண்டளவாக, நம்மை, அச்சத்தில் மூழ்கடித்து, நம்மை, முற்றிலும் செயலிழக்கச் செய்துவிட்டன.

இறுதியாக ஓர் எண்ணம்... பல நேரங்களில் நாம் வாழ்வில் பகிர்ந்துகொள்ளும் நற்செய்திகள், வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட, நம் வாழ்வு நற்செய்தியாக மாறவேண்டும் என்பதை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.

ஒரு நாள் அசிசி நகர் புனித பிரான்சிஸ் தன்னுடன் ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். ஊருக்குள் நுழைந்த்தும், வயலில், அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன், பிரான்சிஸ் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். பின்னர், ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் பலருக்கும் உதவிகள் செய்தார் பிரான்சிஸ். அந்த நாளின் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ், கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.

இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் சென்றபோது, இளையவர், தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம்? இப்போது, போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார்.  "நாம் தேவையான அளவு இன்று போதித்துவிட்டோம். நமது செயல்கள், வார்த்தைகளை விட வலிமை மிக்கவை. தேவைப்படும்போது மட்டும், வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு புனித பிரான்சிஸ் கூறினார்.

“இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்.” என்று இறைவாக்கினர் யோனா வழியாகத் தரப்பட்ட அந்த எச்சரிக்கை, நினிவே மக்களை மனம் மாற்றியது. அவர்களை, அழிவிலிருந்து காத்தது. இன்றைய நற்செய்தியில், "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு, பலரை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தது. அவர்களில், மீன்பிடித் தொழிலாளிகளான, அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர், தங்கள் உடைமைகள், உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

நன்மை பயக்கும் செய்திகளைத் தரும் கருவிகளாக நாம் மாறவேண்டும். நாம் பரிமாறும் செய்திகள், வெறும் தகவல் பரிமாற்றமாக இல்லாமல், செயலுக்கு, அதுவும், உன்னதமானச் செயலுக்கு, மக்களைத் தூண்டும் சவால்களாக அமையவேண்டும். அனைத்திற்கும் மேலாக, வாய் வார்த்தைகள் வழியே பகிர்ந்துகொள்ளப்படும் செய்தியைவிட, நம் வாழ்வின் வழியே நற்செய்தியைப் பறைசாற்றும் கருவிகளாக நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்று, இந்த இறைவார்த்தை ஞாயிறன்று மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2021, 15:13