தேடுதல்

Vatican News
இயேசு திரும்பிப் பார்த்து, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். - யோவான் 1:38 இயேசு திரும்பிப் பார்த்து, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். - யோவான் 1:38 

பொதுக்காலம் 2ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

நம் வாழ்வில், கடவுளுக்கு உன்னதமானதோர் இடத்தை வழங்கி, அவரிடம் நம் உறவுகளை அழைத்துச் செல்லும் வரத்தை, இன்று நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 2ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஆங்கிலத் திரைப்பட நடிகர்களில் ஒருவரான, அலெக் கின்னஸ் (Alec Guinness) அவர்கள், பிறந்ததுமுதல், தந்தை யாரென்று அறியாமல் வளர்ந்தவர். அவர், ஆங்கிலிக்கன் சபையைச் சேர்ந்தவர் என்றாலும், இளமைப்பருவத்தில், மதம் சார்ந்த விடயங்களில் அக்கறை ஏதுமின்றி வாழ்ந்தார். தன் 19வது வயதில், மேடை நாடகங்களில் பங்கேற்று, பின்னர், திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் பெற்றார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் G.K.Chesterton அவர்கள், கத்தோலிக்க குரு ஒருவரை மையப்படுத்தி உருவாக்கிய Father Brown என்ற சிறுகதைகளின் தொகுப்பு, திரைப்படமாக உருவானபோது, அதில், அலெக் கின்னஸ் அவர்கள், Father Brown பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, பிரான்ஸ் நாட்டின் ஒரு கிராமத்தில் நடைபெற்றது.

ஒருநாள் மாலை, அலெக் அவர்கள், அன்றைய படப்பிடிப்பை முடித்தகையோடு, நடிப்பதற்காக அணிந்திருந்த அங்கியைக் கழற்றாமல், தான் தங்கியிருந்த ஓட்டலை நோக்கி நடந்துசென்றார். அப்போது, வழியில், ஒரு சிறுவன், அவரை, உண்மையிலேயே ஓர் அருள்பணியாளர் என்று எண்ணி, ஒரு புன்சிரிப்புடன், அவரிடம் ஓடிவந்து, அவரது கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவருடன் நடந்துசென்றான்.

தன் மனதில் ஆழமாகப்பதிந்த அந்நிகழ்வு, கத்தோலிக்க மதத்தைப்பற்றி தான் கொண்டிருந்த தவறான எண்ணங்களை மாற்றியது என்று, அலெக் அவர்கள், தன் சுய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்: "முன்பின் எவ்வித அறிமுகமும் இல்லாதபோதும், ஒரு சிறு குழந்தையின் மனதில், ஓர் அருள்பணியாளரின் உருவம், இவ்வளவு நம்பிக்கையை உருவாக்கமுடியும் என்றால், அந்த கத்தோலிக்க மறையில், நிச்சயம் நல்லவை பல இருக்கவேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார். அடுத்துவந்த ஆண்டுகளில், ஒருவர்பின் ஒருவராக, அலெக் கின்னஸ், அவரது மனைவி, மெருலா (Merula), மகன் மேத்யூ மூவரும் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினர்.

கடவுள், ஒருவருடைய வாழ்வில், பல வியப்பான வழிகளில் அறிமுகமாகின்றார். வயதில் வளர்ந்த அலெக் அவர்களும், அவரை, இறைவனிடம் மீண்டும் அழைத்துச்சென்ற அச்சிறுவனும், இன்றைய ஞாயிறு வாசகங்களில் கூறப்பட்டுள்ள இரு வேறு நிகழ்வுகளை சிந்திக்க உதவியாக உள்ளனர்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில், உறங்கிக்கொண்டிருந்த சிறுவன் சாமுவேலுக்கு கடவுள் அறிமுகமாகும் நிகழ்வு பதிவாகியுள்ளது. வயதில் வளர்ந்துவிட்ட அந்திரேயாவும், சீமோன் பேதுருவும் இயேசுவுக்கு அறிமுகமாகும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் இடம் பெற்றுள்ளது. இவ்விரு நிகழ்வுகளும், நம் வாழ்வுக்குத் தேவையான சில பாடங்களைக் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கின்றன.

சிறுவன் சாமுவேலுக்கு, ‘ஆண்டவர் இல்லத்தில்’ அறிமுகமாகிறார் இறைவன். சாமுவேலைப் பொருத்தவரை, ஆண்டவரின் இல்லம், அவன் வாழ்வாக மாறியிருந்தது. இருந்தாலும், அந்தப் புனிதமான இடத்திலும், அச்சிறுவனால், இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

கடவுளைக் காண்பதற்குத் தேவையான உண்மையான, உள்ளார்ந்த கண்ணோட்டம் இல்லையெனில், அவர் குடியிருக்கும் இல்லத்திலும் அவரைக் காணஇயலாமல் போகலாம். ஒரு சில நேரங்களில், ஆலயங்களில், வழிபாட்டு நேரங்களில், கடவுளை மறைக்கும் அளவிற்கு, அல்லது, மறந்துபோகச் செய்யும் அளவிற்கு, வேற்று எண்ணங்கள் மனதை ஆக்ரமித்தால், அவரைக் காணமுடியாமல் தடுமாறவேண்டியிருக்கும். இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் குரு ஏலிக்கு இந்த நிலை உருவானது.

சாமுவேலுக்கு இறைவனைப்பற்றி பல உண்மைகளைக் கற்றுத்தந்தவர் ஏலி. ஆனாலும், சாமுவேலை ஆண்டவர் அழைக்கிறார் என்பதை, அவரும், உடனே உணர்ந்துகொள்ளவில்லை. இதற்கு, அவரது கண்பார்வை மங்கிவந்தது (1 சாமு. 3:2) மட்டும் காரணமல்ல, அவரது புதல்வர்களின் தாறுமாறான வாழ்வு, அவரது உள்ளத்தை கவலையால் நிறைத்திருந்ததும் காரணம்.

மூன்றாம் முறையாக, சிறுவன் சாமுவேல், தன்னை அணுகி வந்தபோதுதான், அவர், இறைவன் சாமுவேலை அழைக்கிறார் என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறார். தான் சொல்லித்தந்தவை அனைத்தையும்விட, தன் சீடன் சாமுவேல், ஆண்டவருக்கு நேரடியாக அறிமுகமாகும் அனுபவம், எவ்வளவோ உயர்ந்தது என்பதை உணர்ந்த குரு ஏலி, தனது உதவி இன்றி, சாமுவேல், இறைவனை, எவ்வாறு நேரில் சந்திக்கமுடியும் என்பதை உணர்த்துகிறார்.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. குரு ஏலியைப்போல, திருமுழுக்கு யோவானும், தன் சீடர்களுக்கு, இயேசுவைச் சுட்டிக்காட்டி, அவர்கள், அவருக்கு அறிமுகமாவதற்கும், அவரைப் பின்செல்வதற்கும் வழிவகுக்கிறார்.

சாமுவேலுக்கு, இறைவன், கோவிலில் அறிமுகமாகிறார். நற்செய்தியிலோ, இயேசுவின் அறிமுகம், வழியோரம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத்தலங்களிலும் இறைவன் அறிமுகமாவதைவிட, சாதாரண, வாழ்வுச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே, மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன. இதை உணர்வது, நம்மை இன்னும் கூடுதலான விழிப்புணர்வுடன் வாழ உதவும்.

வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இந்நிகழ்வைக் கூறும் யோவான் நற்செய்தியின் ஒருசில வரிகளைக் கேட்போம்:

  • யோவான் நற்செய்தி 1: 38-39
  • இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள்... அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.  

"என்ன தேடுகிறீர்கள்?" "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற இரு கேள்விகளையும், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பையும் மையப்படுத்தி, இன்றைய நற்செய்தி பின்னப்பட்டுள்ளது. “என்ன தேடுகிறீர்கள்?” என்ற சொற்கள், இயேசு கூறும் முதல் சொற்களாக, யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மிக ஆழமான, பொருள்நிறைந்த ஒரு கேள்வி இது. வாழ்வு முழுவதும் நம்மை அடிக்கடி சுற்றிவரும் கேள்வி இது. மனிதவாழ்வில், தேடுதல் ஒரு முக்கிய அம்சம். நம்மில் பலர், என்ன தேடுகிறோம் என்பது புரியாமலேயே, வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவருகிறோம். அல்லது, தவறானவற்றைத் தேடி களைத்துப்போகிறோம்.

சின்ன மீன் ஒன்று கடலில் நீந்திக்கொண்டிருந்தது. அது, அங்குமிங்கும் நீந்தி, எதையோ தேடுவதைப்போல் காணப்பட்டது. இதைப் பார்த்த ஒரு பெரிய மீன், அதனிடம், "என்ன தேடுகிறாய்?" என்று கேட்க, சின்ன மீன், "கடல், கடல் என்று நீங்கள் எல்லாரும் பேசிக்கொள்கிறீர்களே, அது எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னதாம். கடலுக்குள் இருந்துகொண்டே, கடலைத் தேடிய சின்ன மீனைப் போல, நாமும், இறைவன், ‘அங்கிங்கெனாதபடி எங்கும்’ நிறைந்து, நம்மைச் சூழ்ந்திருந்தாலும், அவரைப் புரிந்துகொள்ளாமல் தேடிக்கொண்டிருந்ததை இப்போது எண்ணிப் பார்க்கலாம். முக்கியமாக, நம் துன்ப நேரங்களில், இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணி, நாம் காணாமல் போயிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்கலாம்.

"என்ன தேடுகிறீர்கள்?" என்று இயேசு கேட்டது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஏதோ ஒரு தேவையை நிறைவேற்றுவதற்காக தன்னைச் தேடிவருபவர்களே அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லும்வண்ணம், இயேசு இந்தக் கேள்வியைக் கேட்பதுபோல் தெரிகிறது.

தாங்கள் எந்த ஒரு தேவைக்காகவும் இயேசுவைத் தேடிவரவில்லை, மாறாக, தாங்கள் அவரையே தேடிவந்திருக்கிறோம் என்பதை உணர்த்த, அச்சீடர்கள், "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற கேள்வியை கேட்கின்றனர். அவர்களது தேடல் உண்மையானது, ஆழமானது என்பதை உணர்ந்த இயேசு, அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பை விடுக்கிறார். அந்த அழைப்பை சீடர்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றனர். உண்மையான உறவுகளில், நாம் 'எதை' தேடுகிறோம் என்பதைவிட, 'யாரை' தேடுகிறோம் என்பது முக்கியம்.

இறைவனை, இயேசுவை உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க விரும்பும் சீடர்களுக்குத் தேவையான இரு அம்சங்கள், இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான அம்சங்கள். இயேசுவைத் தேடி, அவருடன் தங்கியதால், ‘மெசியாவைக் கண்டுகொண்ட’ (யோவான் 1:41) அந்திரேயா, தான் பெற்ற இன்பத்தை, தன் சகோதரரும் பெறவேண்டும் என்று, சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்துவருகிறார்.

நம் குடும்பங்களில் உடன்பிறந்தோரும், உறவுகளும், வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக, பலரை நாம் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறோம். இந்த அறிமுகங்கள் அனைத்தையும்விட, மிக முக்கியமான அறிமுகம், உடன்பிறந்தோரையும், உறவுகளையும், இறைவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. ஆனால், இந்த அறிமுகம், நம் குடும்பங்களில் நடைபெறுகிறதா? நாம் வாழும் இன்றைய உலகில், குடும்பங்களில், இறைவனை அறிமுகம் செய்துவைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? அல்லது, இறைவனை, நாம், கோவில்களில் பூட்டிவைத்துவிட்டு, வாழ்வின் ஒருசில தருணங்களில் மட்டும் அவரை, நம் உறவுகளுக்கு, அறிமுகப்படுத்துகிறோமா? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும்.

கடவுள், நம் வாழ்வில் முக்கிய இடம்பெறவில்லை என்பதால், அவரை, நமது குடும்பங்களிலோ அல்லது, நட்பு வளையங்களிலோ அறிமுகப்படுத்த நமக்குள் தயக்கம் எழுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக, வர்த்தகத்தில் பங்குதாரர்களாக இருந்துவரும் இரு நண்பர்கள், ஒரு ஞாயிறன்று காலையில், ஒருவரையொருவர் சந்தித்தனர். ஒரு நண்பர் மற்றொருவரிடம், "இன்று காலை என்ன செய்யப்போகிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு நண்பர், "நான் ‘கால்ப்’ (Golf) விளையாடப் போகிறேன். நீயும் வா" என்றழைக்க, முதல் நண்பர் மறுத்துவிட்டு, "இல்லை, நான் கோவிலுக்குப் போகவேண்டும்" என்று சொல்கிறார். இதைக் கேட்டதும், இரண்டாவது நண்பர், "நீ இந்த கோவில் தொடர்பான விடயங்களை விட்டுவிடலாமே" என்று ஆலோசனை சொல்ல, முதல் நண்பர் சிறிது அதிர்ச்சியடைகிறார். இருந்தாலும், தன் நண்பர் ஏதோ விளையாட்டுக்காக சொல்கிறார் என்று எண்ணி, "ஏன் அப்படி சொல்கிறாய்?" என்று கேட்கிறார். இரண்டாவது நண்பர் அவரிடம், "நண்பா, இதை நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. சிறிது யோசித்துப்பார். நாம் இருவரும் இருபது ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். வாரம் முழுவதும் ஒன்றாக வேலை செய்கிறோம், பலமுறை சந்திக்கிறோம், ஒன்றாக உணவருந்துகிறோம். இத்தனை ஆண்டுகளாக நீ என்னை ஒருமுறை கூட உங்கள் கோவிலுக்கு அழைத்ததில்லையே. இதிலிருந்து, கோவில் விடயங்கள் உனக்கு அவ்வளவு முக்கியமில்லை என்று தெரிகிறது. பின் ஏன் அதை நீ விட்டுவிடக் கூடாது?" என்று கேட்டார்.

தான் இயேசுவைச் சந்தித்தது, எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த அந்திரேயா, தன் சகோதரர் பேதுருவும் அந்த முக்கியத்துவத்தை உணர்வதற்கு வழிவகுத்தார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. பேதுருவைக் கண்டதும், இயேசுவின் முழு கவனமும் அவர்மீது திரும்பியது. அவரை 'கேபா', 'பாறை', உறுதியானவர், என்றெல்லாம் புகழ்கிறார் இயேசு. தான் அழைத்துவந்த சகோதரர் மீது இயேசு தனி கவனம் காட்டியது, அந்திரேயாவுக்கு வருத்தத்தையோ, பொறாமையையோ உருவாக்கவில்லை. காரணம், அவர் திருமுழுக்கு யோவானின் சீடர். ‘அவர் வளரவேண்டும், தான் மறைய வேண்டும்’ என்று அடிக்கடி சொல்லி வந்த யோவான், இயேசுவை அறிமுகம் செய்தார், மறைந்துபோனார். திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்த அந்திரேயாவும் அதே மனநிலையில் இருந்தார். தான் மறைந்தாலும் சரி, தன் சகோதரன் பேதுரு வரலாறு படைக்கவேண்டும் என்று எண்ணினார்.

இயேசுவும், பேதுருவும் இணைந்து படைத்த அந்த வரலாறு, 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகிறது. அந்த வரலாறு உருவாக காரணமாக இருந்தவர், அந்திரேயா. உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால், உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். நம் வாழ்வில், கடவுளுக்கு உன்னதமானதோர் இடத்தை வழங்கி, அவரிடம் நம் உறவுகளை அழைத்துச் செல்லும் வரத்தை, இன்று நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

16 January 2021, 14:19