தேடுதல்

Vatican News
இறந்த உடல்கள் எரிக்கப்படுதல் இறந்த உடல்கள் எரிக்கப்படுதல்  (COPYRIGHT 2018 VDB PHOTOS LLC)

கோவிட்-19ஆல் இறந்தவர்களை எரிப்பது நிறுத்தப்பட

பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை எனவும், அவர்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா என்பதை, அவரவர் விருப்பத்திற்கு விடவேண்டும் எனவும், ஏறத்தாழ 198 நாடுகள் கூறுகின்றன - ஊடகச் செய்திகள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில், மருத்துவத்துறையின் உதவியோடு, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பலியானவர்களை எரிக்கும் அரசின் கொள்கை, தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவது, சிறுபான்மை மதத்தவருக்கு எதிரானது என்று, அந்நாட்டு திருஅவைத் தலைவர்கள் உட்பட, மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை அரசின் இந்நடவடிக்கை கைவிடப்படவேண்டும் என்றுரைத்துள்ள, திருக்குடும்ப துறவு சபையின் அருள்சகோதரி Rasika Pieris அவர்கள், அரசின் இந்த கொள்கை, மனித சமுதாயத்திற்கெதிரான பாவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்கள், இந்நோயால் இறந்த தங்கள் உறவுகளை அடக்கம் செய்வதற்கு விரும்பும்வேளையில், அவர்களோடு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் முறையில், கிறிஸ்தவ ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், கல்வித்துறையில் உள்ளோர் உட்பட, பொது மக்கள் குழு ஒன்று கையெழுத்திட்டு, அரசிடம் சமர்ப்பித்த மனு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், அச்சகோதரி கூறினார்.   

பெருந்தொற்றால் இறப்பவர்களை, கட்டாயமாக எரிக்கும் அரசின் கொள்கை, ஆழமான சமய மற்றும், கலாச்சாரப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்று, மருத்துவப் பணியாளர்களும் ஏற்கின்றனர் என்றுரைத்த அருள்சகோதரி Pieris அவர்கள், இந்நடவடிக்கை, இலங்கை சமுதாயத்தின் நல்லிணக்க மற்றும், ஒப்புரவு வாழ்வை மட்டுமல்ல, பொதுவான நலவாழ்வுக்கும் பிரச்சனையாக உள்ளது என்று கூறினார்.

இறந்த உடல்களை, முழுவதுமாக எரிப்பதற்கு, 800 முதல் 1,200 செல்சியுஸ் டிகிரியில், குறைந்தது 45 நிமிடங்கள் அவை வைக்கப்படவேண்டும் என்று அரசின் விதிமுறை கூறுகிறது.

பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை என்றும், அவர்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா என்பதை அவரவர் விருப்பத்திற்கு விடவேண்டும் என்றும், ஏறத்தாழ 198 நாடுகள் கூறுவதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. (UCAN)

05 January 2021, 15:09