தேடுதல்

புனித யாக்கோபு திருத்தலம் புனித யாக்கோபு திருத்தலம் 

இஸ்பெயின் தலத்திருஅவை - 2021, யாக்கோபு ஆண்டு

திருத்தூதர் புனித யாக்கோபின் கல்லறை மீது Santiago de Compostela திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. புனித யாக்கோபு யூபிலி ஆண்டு கொண்டாடப்படுவது, 1126ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின் நாட்டில், புனித சந்தியாகப்பர் என அழைக்கப்படும், திருத்தூதர் புனித யாக்கோபு திருத்தலத்தின் கதவுகள், அனைத்து மனிதருக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று, அந்நாட்டின் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இஸ்பெயின் தலத்திருஅவை, 2021ம் ஆண்டை, யாக்கோபு ஆண்டு என சிறப்பிப்பதை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 31ம் தேதி, அந்த ஆண்டை Santiago de Compostela நகரிலுள்ள புனித யாக்கோபு திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி துவக்கி வைத்த, Santiago de Compostela உயர்மறைமாவட்ட பேராயர் Julián Barrio Barrio அவர்கள், இவ்வாறு கூறினார்.

பேராயர் Barrio அவர்கள், புனித யாக்கோபு ஆண்டின் துவக்கமாக, அத்திருத்தலத்தின் புனிதக் கதவை அடையாளப்பூர்வமாகத் திறந்துவைத்த நிகழ்வில், இஸ்பெயின் நாட்டின் ஓய்வுபெற்ற கர்தினால் Antonio María Rouco Varela, திருப்பீடத் தூதர், பேராயர் பெர்னார்தோ அவுசா உட்பட, சந்தியாகோ மாநிலத்தைச் சேர்ந்த திருஅவைத் தலைவர்கள் பங்குபெற்றனர்.

இந்த இரக்கத்தின் கதவைத் தட்டி திறந்துவைக்கின்றேன், இந்தக் கதவைத் தட்டுகின்றவர்கள் அனைவருக்கும் இது திறக்கும் என்றுரைத்த பேராயர் Barrio அவர்கள், திருத்தூதர் புனித யாக்கோபு, நாம் பிறரன்பைச் செயல்படுத்த நமக்குத் தடையாய் இருக்கும் அனைத்தினின்றும், நம்மை விடுவிப்பாராக என்று கூறினார்.

இந்த யூபிலி ஆண்டுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்திக்கும் நன்றி தெரிவித்த பேராயர் Barrio அவர்கள், கவலைகள் மற்றும், துன்பங்களால் நிறைந்துள்ள நம் அனைவருக்கும், இந்த புனிதர் நம்பிக்கையை அருள்வாராக என்றும் மன்றாடினார்.

திருத்தூதர் புனித யாக்கோபின் கல்லறை மீது Santiago de Compostela திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. புனித யாக்கோபு யூபிலி ஆண்டு கொண்டாடப்படுவது, 1126ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த யூபிலி ஆண்டு ஒவ்வொரு 5, அல்லது, 6 அல்லது, 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பிக்கப்படுகிறது.

05 January 2021, 15:06