தேடுதல்

மியான்மார் தலைவர்களோடு கர்தினால் போ மியான்மார் தலைவர்களோடு கர்தினால் போ 

கிறிஸ்தவ சபைகள் அமைதியின் இறைவாக்கினர்களாக செயல்பட..

மியான்மார் நாட்டில், கடந்த எழுபது ஆண்டுகளில் உருவான எந்தப் பிரச்சனையையும், போர்களால் தீர்த்துவைக்க முடியவில்லை. கிறிஸ்தவர்கள், நீதியின் அடிப்படையில், அமைதியை நோக்கிய போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும் - கர்தினால் சார்லஸ் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் உள்நாட்டுப் போரினால் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் நாட்டில், கிறிஸ்தவ சபைகள், அமைதியின் இறைவாக்கினர்களாகச் செயல்படுமாறு, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சனவரி 18, இத்திங்களன்று தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், மியான்மார் ஆயர் பேரவைத் தலைவரும், யாங்கூன் பேராயருமான கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“அமைதியை உங்களுக்கு விட்டுச்செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” (யோவா.14:27) என்ற நம் ஆண்டவரின் திருச்சொற்களை, அனைத்து கிறிஸ்தவர்களும் செவிமடுக்குமாறு கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், அந்நாட்டிற்குத் தேவையான கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்குவதற்கு, நன்கொடைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மார் நாட்டிற்கு, அமைதியின் தடுப்பூசி மருந்து உடனடியாகத் தேவைப்படுகின்றது என்றும், ஒன்றிணைவது வழியாகவே, நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண முடியும் என்பதை, கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து நினைவுறுத்தி வருகின்றது என்றும், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மார் எதிர்கொண்டுள்ள பெருந்தொற்றுகள்

எழுபது ஆண்டுகள் போர், புலம்பெயர்ந்தோர் முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்துன்பங்களில் வாழ்ந்து வருவது, போதைப்பொருள் மற்றும், வளங்கள் சுரண்டப்படுதல், தலைமுறைகள், முடிவுறாத போர்ச்சூழல்களில் வாழ்ந்துவருதல் போன்ற, மியான்மார் நாட்டை, கடுமையாய் பாதித்துள்ள, மற்ற பெருந்தொற்றுகள் பற்றியும், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் போ.

மியான்மார் நாட்டில், கடந்த எழுபது ஆண்டுகளில் உருவான எந்தப் பிரச்சனையையும், போர்களால் தீர்த்துவைக்க முடியவில்லை என்றும், கிறிஸ்தவர்கள், நீதியின் அடிப்படையில், அமைதியை நோக்கிய போராட்டத்தை மேற்கொள்வோம் என்றும், உரைத்துள்ள கர்தினால் போ அவர்கள், தங்கள் நாட்டில் அமைதி இயலக்கூடியதே, மற்றும், அமைதிதான் ஒரே வழி என்றும் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டின் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும், நம் புனித நிலத்தின் பீடத்தைச் சுற்றிலும் கூடியிருந்து, அமைதியின் அப்பத்தைப் பிடுவோம் என்றும்,  மூவொரு கடவுள், நம்மிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைவதற்குரிய ஞானத்தை அருள்வாராக மற்றும், அமைதிக்காக நம்மிலுள்ள தணியாத் தாகத்தை தம் ஆசீரால்  தணிப்பாராக என்றும், கர்தினால் போ அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2021, 14:04