தேடுதல்

Vatican News
ஈராக்கில் கிறிஸ்மஸ் ஈராக்கில் கிறிஸ்மஸ்   (AFP or licensors)

ஈராக் திருத்தூதுப்பயணத்திற்காக ஞாயிறு திருப்பலிகளில் செபம்

2003ம் ஆண்டில் ஈராக்கின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரமாகக் குறைந்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மார்ச் மாதத்தில் ஈராக் நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணத்திற்காக, ஞாயிறு திருப்பலிகளில் இறைவேண்டல் செய்யுமாறு, அந்நாட்டு திருஅவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்திற்காக, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் எழுதி, வெளியிட்டுள்ள இறைவேண்டலை, சனவரி 17, வருகிற ஞாயிறு முதல், அனைத்து ஞாயிறு திருப்பலிகளிலும் விசுவாசிகள் செபிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நதிகள் பாயும் இந்த ஈராக் மண்ணிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் இயலக்கூடிதாய் அமையவேண்டும் என்பதற்காக, திருப்பலிகளில் உருக்கமாகச் செபிக்குமாறு, கர்தினால் சாக்கோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம் ஆண்டவராம் கடவுளே, நாங்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இத்திருத்தூதுப் பயணம், வெற்றிகரமாக அமைய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நல்ல சுகத்தையும், பாதுகாப்பையும் அருள்வீராக. உரையாடலை ஊக்குவித்து, மனித உடன்பிறந்த ஒப்புரவை வளர்த்து, நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அமைதி மற்றும், மனித மாண்பு ஆகிய விழுமியங்களை, அனைவருக்கும், குறிப்பாக ஈராக் மக்களுக்கு வழங்குவதற்கு, திருத்தந்தை மேற்கொண்டுவரும் முயற்சிகளை ஆசீர்வதிப்பீராக என்று, அந்த இறைவேண்டல் அமைந்துள்ளது.

ஈராக் நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும், தலத்திருஅவையின் அழைப்பின்பேரில், அந்நாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டில் ஈராக் மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 இலட்சமாக, அதாவது 6 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரமாகக் குறைந்துள்ளது. (Fides/CNA) 

15 January 2021, 14:08