தேடுதல்

Vatican News
திருத்தந்தை 4ம் பொனிபாஸ்  திருத்தந்தை 4ம் பொனிபாஸ்  

திருத்தந்தையர் வரலாறு – பெரிய கிரகரிக்குப் பின்வந்த 5 திருத்தந்தையர்

எந்த ஒரு திருத்தந்தையோ, ஆயரோ, தான் வாழும் காலத்தில் தனக்கு வாரிசாக எவரையும் முன்வைக்கக்கூடாது என புதிய ஒரு சட்டத்தை அறிவித்த திருத்தந்தை மூன்றாம் போனிபாஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை புனித பெரிய கிரகரி அவர்களின் பொற்காலத்தைத் தொடர்ந்து, திருஅவையை வழிநடத்த வந்தார், திருத்தந்தை சபினியானுஸ் (Sabinianus). 604ம் ஆண்டு செப்டம்பர் 13ந் தேதியன்று பொறுப்பேற்ற இவர், இரண்டாண்டிற்குள்ளேயே, அதாவது, 606ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இறைபதம் சேர்ந்தார். இவர் அருள்பணியாளராக இருந்தபோது, 593ம் ஆண்டில், Constantinople அரசவைக்கு திருப்பீடப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டிருந்தார். ஆனால், எளிமை நிறைந்த இவரால், Byzantine அரசர்களின் தந்திரங்கள் முன்னால் வெற்றிகாண முடியவில்லை. 597ம் ஆண்டு உரோமைக்குத் திரும்பி, அங்கேயே பணியாற்றிய இவர், பெரிய கிரகரி அவர்களின் மரணத்திற்குப்பின் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் காலத்தில், பஞ்சம் நிலவியதால், திருஅவையின் தானியக் கிடங்குகளைத் திறந்து, மக்களுக்கு, தானியங்களை, குறைந்த விலைக்கு விற்க உத்தரவிட்டார். மேலும், முந்தைய திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், திருப்பீடத்தின் பல பொறுப்புகளில் துறவிகளை நியமித்ததை இவர் நீக்கி, அங்கு மறைமாவட்ட அருள்பணியாளர்களை நியமித்தார்.

திருத்தந்தை சபினியானுஸ் அவர்களின் மரணத்திற்கு பின் தலைமைப்பொறுப்பை ஏற்றார், திருத்தந்தை மூன்றாம் போனிபாஸ். இவரும் முந்தைய திருத்தந்தையைப்போல், அருள்பணியாளராக இருந்த காலத்தில், திருத்தந்தை பெரிய கிரகரி அவர்களால் Constantinopleன் திருப்பீடப் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். 603ம் ஆண்டு, திருப்பீடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இவர், மிகுந்த திறமையுடன் செயல்பட்டு, பேரரசர் Phocasன் நட்பையும் பெற்றார். பின்னர், 607ம் ஆண்டு, பிப்ரவரி 19ம் தேதி, இவர் திருத்தந்தையானபோது, அப்பேரரசரின் உதவியுடன், உரோமை ஆயரே அனைத்துலகக் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் என்ற ஆணையை, மீண்டும் உறுதிப்படுத்தி அறிவிக்க வைத்தார். ஏற்கனவே, 80 ஆண்டுகளுக்கு முன்னர் பேரரசர் ஜஸ்டினியன் அவர்களால்   இது அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், பேரரசர் Phocas அவர்களால் மீண்டுமொருமுறை இது அறிவிக்கப்பட்டு, உறுதிப்படுத்தபட்டதற்கு, திருத்தந்தை மூன்றாம் போனிபாஸ் அவர்களே காரணம். இவர் 72 ஆயர்களையும், உரோமை அருள்பணியாளர்களையும் கூட்டி, ஒரு புதிய சட்டத்தை அறிவித்தார். அதாவது, எந்த ஒரு திருத்தந்தையோ, ஆயரோ, தான் வாழும் காலத்தில், தனக்கு வாரிசாக எவரையும் முன்வைக்கக்கூடாது என்பதே அச்சட்டம். திருத்தந்தை மூன்றாம் போனிபாஸ் அவர்கள், 607ம் ஆண்டு, அதாவது, தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு, நவம்பர் மாதம் 12ந் தேதி இறைபதம் சேர்ந்தார்.

திருத்தந்தை மூன்றாம் போனிபாஸ் அவர்களுக்குப்பின் வந்தவர், புனித 4ம் போனிபாஸ்.  திருத்தந்தை பெரிய கிரகரி அவர்களின் காலத்தில் திருஅவைச் சொத்துக்களை நிர்வகித்து வந்தவர் இவர். இத்திருத்தந்தைதான், உரோம்நகரின், புறவினத்தாருக்குரிய, பிரபலமான Pantheon  கோவிலை கத்தோலிக்க கோவிலாக திருநிலைப்படுத்தியவர். Jupitar, Venus மற்றும் Mars கடவுள்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டிருந்த அக்கோவிலை, பேரரசர் Phocas அவர்களின் அனுமதிபெற்று, 609ம் ஆண்டு மே 13ல் கிறிஸ்தவக் கோவிலாக மாற்றினார். அக்கோவில், அன்னைமரியாவுக்கும், அனைத்து மறைசாட்சிகளுக்கும் என அர்ப்பணிக்கப்பட்டது. ஆதிகால கிறிஸ்தவர்கள் வாழ்ந்து, அடக்கம் செய்யப்பட்டிருந்த பாதாள அறைகளிலிருந்து, 28 குதிரை வண்டிகளில், மறைசாட்சிகளின் எலும்புகள் கொணரப்பட்டு இந்த  Pantheon கோவிலின் திருப்பலி பீடத்திற்குக் கீழ் புதைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இலண்டனின் முதல் ஆயர் Mellitus அவர்கள், உரோம் நகர் வந்து திருத்தந்தை 4ம் பொனிபாஸ் அவர்களைச் சந்தித்து, ஆலோசனைகள் நடத்திவிட்டுச் சென்றார். ஆயர் Mellitus  வழியாகத்தான், Canterbury பேராயர் Lawrence, மன்னர் Ethelbert, மற்றும்,  இங்கிலாந்து மக்கள் அனைவருக்கும், கத்தோலிக்க வழிகாட்டுதல் கடிதம் ஒன்றை திருத்தந்தை 4ம் போனிபாஸ் அவர்கள் அனுப்பினார். திருத்தந்தை 4ம் போனிபாஸ் அவர்கள், தன் வீட்டையே துறவு இல்லமாக மாற்றி, அதில் தன் கடைசி காலத்தை செலவிட்டார். 608ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி திருஅவையின் தலைமைப் பதவியேற்ற இவர், 615ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

615ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, திருத்தந்தையாக பதவியேற்ற திருத்தந்தை புனித Deusdedit (தேயுஸ்தேதித்) அவர்கள், நவம்பர் 8, 618ம் ஆண்டு உயிரிழந்தார். இத்திருத்தந்தை, ஏழைகள் பால் மிகுந்த பற்றுக்கொண்டவராக இருந்தார். இவர் காலத்தில் உரோம் நகரை பெரும் நிலநடுக்கம் தாக்கியதுடன், உரோம் மறைமாவட்டத்தில், தொழுநோயும் வெகுவேகமாக பரவியது. மக்களின் துயர்களை அகற்றுவதில், ஏனைய அருள்பணியாளர்களுக்கு, இவர் ஒரு பெரும் முன்மாதிரியாக இருந்தார். அரசியல் பிரச்சனைகளால் மனம் தளர்ந்திருந்த அருள்பணியாளர்களுக்கு, பெரும் ஆதரவும் ஊக்கமும் அளித்து உற்சாகமூட்டினார் திருத்தந்தை Deusdedit. இத்திருத்தந்தையின் மரணம் நிகழ்ந்து, ஓராண்டு இடைவெளிக்குப்பின் 23 டிசம்பர், 619ம் ஆண்டு திருத்தந்தையானவர் 5ம் போனிபாஸ். இவர் காலத்தில், திருத்தலங்கள் குறித்த சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இங்கிலாந்து திருஅவையின்மீது இவர் அதிக ஆர்வம் காட்டி அது வளர்வதற்கு உதவினார். 625ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி காலமானார் திருத்தந்தை 5ம் போனிபாஸ்.

புனித பெரிய கிர்கரி அவர்களுக்குப்பின் திருத்தந்தையர்களாக வந்த சபினியானுஸ், 3ம் போனிபாஸ், 4ம் போனிபாஸ், Deusdedit,  மற்றும், 5ம் போனிபாஸ் என 5 திருத்தந்தையர்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் ஆற்றவில்லை. எனினும், திருஅவையை எவ்வித குழப்பமும், எதிர்ப்பும் இன்றி, அமைதியான முறையில் வழிநடத்திச் சென்றார்கள் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும். அடுத்து வந்த திருத்தந்தை முதலாம் Honoriusன் காலம் குறித்து, வரும் வாரத்தில் நோக்குவோம்.

27 January 2021, 12:14