தேடுதல்

புனித பெரிய கிறகரி பெயரிலான வத்திக்கான் பதக்கம் புனித பெரிய கிறகரி பெயரிலான வத்திக்கான் பதக்கம் 

திருத்தந்தையர் வரலாறு - புதிய சகாப்தத்தின் தொடர்ச்சி

ஆன்மீகப்பணிகளில் அதிக கவனம் செலுத்திவந்த அருள்பணியாளர்கள், நிர்வாகப் பணிகளிலும் அதிக பொறுப்பேற்றுக்கொண்டது திருத்தந்தை பெரிய கிறகரி அவர்களின் காலத்தில்தான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த வாரத்தில் புனித பெரிய கிறகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை பார்த்தோம். பெரிய செல்வந்தராக, அதுவும், உரோமைய அரசின் உயர் அதிகாரியாக இருந்த ஒருவர், துறவு வாழ்வை மேற்கொள்ள விரும்பி ஒரு துறவு இல்லத்தை ஆரம்பித்தவுடன், எவ்வாறு தன் சொத்துக்களையெல்லாம் அத்துறவு இல்லத்திற்கே அர்ப்பணித்து எளிய வாழ்வை மேற்கொண்டார் என கண்டோம். வேறு நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்க விரும்பிய இவரின் ஆர்வத்தை, உரோம் மக்கள் இவர் மீது கொண்ட ஆர்வத்தால் தடை செய்தனர் எனவும் நோக்கினோம். இவ்வேளையில் உரோமைய அருள்பணியாளர்கள் அனைவரும் ஒருமித்த மனதாக இவரையே திருத்தந்தையாகத் தேர்வு செய்ய, இவர் மறுக்க, பின்னர் பேரரசருக்கு மறுப்பு மடல் எழுத, அம்மடலை அரசரின் உரோமை பிரதிநிதி அரசருக்கு அனுப்பாமலேயே இவரை திருத்தந்தையாக அங்கீகரிக்கவேண்டும் என கடிதம் எழுத, பேரரசரும் இவரை அங்கீகரித்து மடல் எழுதிவிட்டார். நிர்வாகியாக இருந்து துறவியான புனித பெரிய கிறகரி தனக்கு திருஅவையின் தலைமை நிர்வாகப் பொறுப்பு வேண்டவே வேண்டாம் என காட்டிற்குள் சென்று ஒளிந்துகொண்டார். மக்கள் அவரை தேடிச்சென்று தூக்கிக்கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. அவரை புனித பேதுரு பெருங்கோவிலுக்குக் கொண்டுவந்து 590ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி உரோமை ஆயராக, அதாவது, திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்தினர்.

நம் திருத்தந்தை பெரிய கிறகரி 14 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தினார். அவரின் பணிப்பளு அதிகம் அதிகமாக இருந்தது எனவும், தன் வாழ்நாளின் சக்தியையெல்லாம் பாப்பிறைப் பணிக்கெனவே செலவிட்டார் எனவும், இவர் காலத்தவர் எழுதி வைத்துள்ளனர். இவரின் பாப்பிறை பதவிக் காலம் முழவதும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு உணவு செரிமானப் பிரச்சனை இருந்தது. அவ்வப்போது காய்ச்சலும் வந்துகொண்டிருந்தது. இது போதாது என்று, கடைசி ஏழு ஆண்டுகள் சந்துவாத நோயாலும் அவதியுற்றார் பாப்பிறை பெரிய கிறகரி. ஆனால், இந்நோயையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், கருமமே கண்ணாய் செயல்பட்டார்; பாப்பிறையான அத்துறவி. எளிமைதான், அதுவும், துறவு இல்ல எளிமைதான் அவரின் வாழ்வாக இருந்தது. அவர் பதவிக்கு வந்தவுடனேயே திருஅவையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தார். அதாவது, இலாத்தரன் பாப்பிறை மாளிகையில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த அனைத்து பொது நிலையினரையும் எடுத்துவிட்டு அப்பணிகளில் அருள்பணியாளர்களை அமர்த்தினார். ஆன்மீகப் பணிகளில் அதிக கவனம் செலுத்திவந்த அருள்பணியாளர்கள், நிர்வாகப் பணிகளிலும் அதிக பொறுப்பேற்றுக்கொண்டது இவர் காலத்தில்தான். திருஅவைச் சொத்துக்களையும் நிர்வகிக்கும் முறைகளை வரைமுறைப்படுத்தினார் இத்திருத்தந்தை. ஏனெனில், இவர் காலத்தில், திருஅவைக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன.

திருஅவையின் நிர்வாகப் பணிகளுக்கென ஏராளமான சொத்துக்களும் வருமானமும் இருந்தபோதிலும், வத்திக்கானின் கருவூலம் எப்போதும் காலியாகவே இருந்தது என்று கூறினால், நம்புவது சிறிது சிரமம்தான். ஆனால், அதுதான் உண்மை. ஏனெனில், ஏழைகளுக்கு வாரிவழங்குவதில் பாப்பிறை பெரிய கிறகரி பெரும் ஊதாரியாக இருந்தார். உரோமையில் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது, சிசிலி தீவிலிருந்து தானியங்களைக் கொணரவைத்து ஏழைகளுக்கு கோவில்கள் வழியாக வாரிவழங்க வைத்தார். இவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள் என்ன தெரியுமா? 'நான் ஏழைகளின் சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு சாதாரண மனிதன்' என்பதேயாகும். 'திருஅவையின் சொத்துக்கள் ஏழைகளுக்கானது, அதன் நிர்வாகி மட்டுமே நான்', என்பதே அவரின் கூற்று. ஏழைகள்பால் இவ்வளவு அன்பு கொண்டிருந்த இத்திருத்தந்தை, நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். அதாவது, இவ்வுலகின் இருவேறு அதிகாரங்களை தராசு ஊசிமுனையுடன் பார்த்தார். பொது விவகாரங்களில் மனிதத் தீர்ப்பே இறுதியானது, ஏனெனில், உலகப் பொருட்களை பொறுத்தவரை அரசரே இறைவனின் பிரதிநிதி என கண்டார். அதேவேளை, ஆன்மீக விடயங்களில் திருத்தந்தையே ஒரே தலைவர் என்பதையும் நிலைநாட்டி நின்றார். தனித்துவத்துடன் எவருக்கும் அஞ்சாமல் செயல்பட்டார். அதேவேளை அரசருக்குத் தேவையான ஒத்துழைப்பையும் இவர் ஒருநாளும் மறுக்கவில்லை. மக்களுக்கான சேவையை பல்வேறு வழிகளில் திறம்பட எடுத்து நடத்துவதில் முன்மாதிரியாகச் செயல்பட்டார் துறவியான இந்த பாப்பிறை.

இத்திருத்தந்தையின் காலத்தில், அதற்கு முந்தைய காலங்களைப்போல் மதவிரோதப்போக்கு நிலவிவந்தது. இயேசுவை யூதர்களே கொன்றார்கள் என்ற வரலாற்று நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இறைத் திட்டத்தை புரிந்துகொள்ளாமல் பலர், யூத விரோதப் போக்கைக் கடைப்பிடித்து அவர்களை ஒதுக்கிவைத்த காலத்தில், திருத்தந்தை கிறகரியின் சில முடிவுகள் புரட்சிகரமானதாக இருந்தன. இவர் யூதர்களின் பாதுகாவலராகச் செயல்பட்டார் என துணிந்து கூறலாம். யூதர்கள் அவர்களின் தொழுகைக்கூடங்களில் வழிபடுவதை அனுமதித்து, ஆதரவு வழங்கினார். அவர்களை கட்டாயமாக கிறிஸ்தவமறைக்கு மனம் திருப்புவதை தீவிரமாக எதிர்த்தார். சட்டம் அனுமதிக்கும் அனைத்து உரிமைகளும் யூதர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனப் போராடி வெற்றியும் கண்டார். அதேவேளை, யூதர்கள், கிறிஸ்தவர்களை தங்கள் வீட்டில் அடிமைகளாக வைத்திருக்கக் கூடாது என்ற பேரரசரின் சட்டத்தை இவரும் ஆதரித்து வலியுறுத்தினார்.

திருஅவையில் திருத்தந்தையான முதல் துறவியான இவர் துறவு வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வலிமையை திருஅவைக்குள் பறைசாற்றினார். அவ்வாழ்வுமுறைக்கு மேலும் மேலும் ஊக்கம் கொடுத்தார். துறவு இல்லங்களுக்கு உதவும்படி செல்வந்தர்களுக்கு அவர் வேண்டுகோள்விடுத்தார். திருஅவையில் தவறுகள் நடந்தபோதெல்லாம் உடனே அவைகளைத் திருத்திக்கொள்ள தயாராக இருந்தார். தவறு நடந்த இடங்களுக்கு உடனே மடல் எழுதி, திருத்திக்கொள்ள கட்டளையிட்டார். 604ம் ஆண்டு மார்ச் மாதம் 12ந்தேதி இவர் உயிரிழந்தபோது, அது திருஅவைக்கு பேரிழப்பாக இருந்தது. பெரிய கல்வியாளரோ, தத்துவஞானியோ, பேச்சாளரோ, ஏன், இறையியலாளராகவோகூட இல்லாத ஒரு துறவி, ஆன்மாக்களின் மருத்துவராக, திருஅவையின் தலைவராக, 14 ஆண்டுகள் செயலாற்றி சிறப்புப்பெற்றார் என்பது பெருமையே.  திருஅவைக்கு ஒரு பொற்காலத்தைக் கொணர்ந்த இந்த புனித திருத்தந்தை, பெரிய கிறகரி என்று அழைக்கப்படுவது பொருத்தமான ஒன்றே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2021, 14:38