தேடுதல்

புனித பெரிய கிறகரி புனித பெரிய கிறகரி  (© Biblioteca Apostolica Vaticana)

திருத்தந்தையர் வரலாறு - புதிய வரலாறு துவங்கியது

திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், துறவு மடத்திலிருந்து தப்பி ஓடி, மூன்று நாள்கள் காட்டுக்குள் ஒளிந்து கொண்ட துறவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கான்ஸ்தாந்திநோபிள் பேரரசர் ஜஸ்டினியனால் பலவந்தமாக கான்ஸ்தாந்திநோபிளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் எட்டு ஆண்டுகளுக்குப்பின் அங்கிருந்து திரும்பும் வழியில் மரணமடைந்த திருத்தந்தை விஜிலியுஸ் குறித்து கடந்த வாரம் கண்டோம். திருத்தந்தை கான்ஸ்தாந்திநோபிளில் இருந்தபோது, அங்கு பாப்பிறை பிரதிநிதியாக இருந்து, பின்னர், திருத்தந்தையுடன் உரோம் நகருக்கு பயணம் மேற்கொண்ட திருத்தொண்டர் பெலாஜியுஸ் அவர்களே, அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருத்தந்தை விஜிலியுஸ், சிராக்குசில் உயிரிழந்தபோது, அவர் உடல் உரோம் நகருக்குக் கொணரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டபின், திருத்தந்தை பெலாஜியுஸ் திருத்தந்தையாக ஏற்கப்பட்டார். தான் திருத்தந்தையாவதற்கு முன்னரே, தன் சொத்துக்களையெல்லாம் ஏழைகள் துயர் நீக்கவும், கோவில்களைச் சீரமைக்கவும் கொடையாக வழங்கியிருந்தார் இத்திருத்தந்தை. இவர் 561ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இறைபதம் அடைந்தபோது, திருத்தந்தையாக 3ம் யோவான் அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டார்.

பாப்பிறை 3ம் யோவானின் தேர்தலை அங்கீகரிக்கும் ஒப்புதல் மடல் பேரரசரிடமிருந்து வர காலதாமதம் ஆகியதால், திருத்தந்தை தன் பாப்பிறை பணிகளைத் துவக்க 5 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவர் 13 ஆண்டுகள் திருஅவையை வழி நடத்திச் சென்றாலும், இவரைக் குறித்த குறிப்புகள் அதிகம் இல்லை. ஏனெனில், லொம்பார்தியர்களின் ஆக்ரமிப்பு காலத்தில் பல வரலாற்று குறிப்புகள் அழிவுக்குள்ளாகியுள்ளன. 574ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி, இவர் காலமானதைத் தொடர்ந்து, திருத்தந்தை முதலாம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டார். இவரும் பேரரசரின் ஒப்புதல் மடல் பெற்று 11 மாதங்களுக்குப் பின்னரே பதவியேற்றார். நான்கு ஆண்டுகள், ஒரு மாதம் 28 நாட்கள் இவர் திருஅவையை வழிநடத்தினார். திருத்தந்தை முதலாம் பெனடிக்ட்டுக்குப்பின் 579ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பதவியேற்றார் திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுஸ். இவருக்கு செயலராகச் செயல்பட்டார் கிறகரி என்ற திருத்தொண்டர். 590ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுஸ் உயிர்துறந்தார்.

திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுசுக்குப்பின் பதவிக்கு வந்தவர் திருத்தந்தை முதலாம் கிறகரி. இவர் திருஅவையில், பெரிய கிறகரி என்றும் அழைக்கப்படுகிறார். திருஅவையின் புதிய சகாப்தம் இவரோடுதான் துவங்கியுள்ளது. 540ம் ஆண்டு உரோம் நகரில் பிறந்த திருத்தந்தை பெரிய கிறகரி அவர்கள், பெரிய செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். சிசிலி தீவில் எண்ணற்ற நிலங்களும், உரோம் நகரில் பெரிய மாளிகையும் இவர் குடும்பத்திற்கு இருந்ததன. இவர் சிறுவயதிலேயே புனிதர்களோடு வாழ்ந்த புனிதர் ஆவார்.  இவரின் தாய் Silviaவும் ஒரு புனிதர். இவரின் தந்தை கொர்தியானுஸின் (Gordianus) இரு சகோதரிகள் Tarsill, மற்றும், Emilianaவும் புனிதர்கள். தன் தாயிடமிருந்தும், இரு அத்தைகளிடமிருந்தும் விவிலியத்தைப் பற்றியும் புனித வாழ்வு குறித்தும் அதிகம் அதிகமாக அறிந்திருந்த இவர், இளவயதிலேயே ஆன்மீக வாழ்வில் நாட்டமுடையவராக இருந்தார். சட்டக்கல்வி பயின்ற முதலாம் கிறகரி, ஏறத்தாழ 30 வயதிலேயே உரோம் நகரின் தலைமை அதிகாரியாக இருந்தார். அதாவது, இன்றைய நகர மேயருக்கு ஈடான பதவியைக் கொண்டிருந்தார். 573ம் ஆண்டு குறிப்பொன்று கூறுகிறது, இவர் உரோம் நகரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்று. ஆனால், 574ம் ஆண்டே இவர் ஆன்மீக வாழ்வில் நாட்டம் கொண்டு தன் உயர் பதவியைத் துறந்து துறவியாகிவிட்டார்.

கிறகரி அவர்கள், தன் அரசுப் பதவியை விட்டு விலகி துறவு வாழ்வை மேற்கொண்டவுடனேயே சிசிலி தீவில் இருந்த தன் சொத்துக்களையெல்லாம் 6 துறவு மடங்களாக மாற்றிவிட்டார். உரோம் நகரில் செலியோ  மலைக்குன்றில் (Monte Celio) இருந்த பெரிய தன் மாளிகையையும் துறவு மடமாக்கி தவம், நோன்பு என்ற முறைகளைக் கடைப்பிடித்து இறைவேண்டலில் கடுமையாக ஈடுபட்டு, துறவு வாழ்வை மேற்கொண்டார். மூன்றாண்டுகள் இத்துறவு மடத்தில் அவர் உடலை வருத்தி நோன்பு செய்ததால், இவரின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இப்பாதிப்பு இவரின் வாழ்நாள் முழுவதும் இருந்தது. இவரின் துறவு வாழ்வு அதிக காலம் நீடிக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், 578ம் ஆண்டு திருத்தந்தை, இத்துறவியை அழைத்து திருத்தொண்டராக திருநிலைப்படுத்தியதுடன், உரோம் மறைமாவட்டத்தின் ஏழு மாகாணப் பிரிவுகளுள் ஒன்றின் நிர்வாகப் பொறுப்பையும் வழங்கினார். திருத்தொண்டராக இருந்த கிறகரி, திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுசால் Byzantine அரசவைக்கு திருத்தந்தையின் நிரந்தரப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். தன் விருப்பத்திற்கு எதிராக திருத்தந்தையால் திருத்தொண்டராக நியமிக்கப்பட்டு, அரசவைக்கும் பிரதிநிதியாக அனுப்பப்பட்டதால் துறவு இல்ல வாழ்வை விடவெண்டியிருக்குமோ என கவலைப்பட்ட கிறகரிக்கு சிறிது ஆறுதல் கிட்டியது. ஆம், அவரின் உரோம் துறவு இல்லத்திலிருந்தவர்கள் இவரோடு கான்ஸ்தாந்திநோபிளுக்கு வந்துவிட்டதால் துறவு இல்ல வாழ்வை மேற்கொள்வதில் இவருக்கு சிரமம் இருக்கவில்லை.

585ம் ஆண்டு, அல்லது, 586ல் இவர் மீண்டும் உரோம் நகருக்கு அழைக்கப்பட்டார். அங்கு இவர் துறவு மடத்தின் அதிபராகப் பணியாற்றினார். இதில் எண்ணற்றோர் இணைந்து துறவு வாழ்வை மேற்கொண்டனர். இவரும் விவிலியம் குறித்த மறையுரைகளை வழங்குவதில் மிகுந்த புகழ்பெற்றவராக விளங்கினார். பிரித்தானியாவிற்குச் சென்று நற்செய்தியை அறிவிக்கவெண்டும் என்ற ஆவல் இவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டேயிருந்தது. துறவியான இவர், திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுஸை அணுகி அனுமதி கேட்க, அவரும், போய் வாருங்கள் என அனுமதி வழங்கினார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், கிறகரி நம்மை விட்டுப் போகிறாரா என கொதித்தெழுந்தனர். தலைவர்கள் கூடினர். அவரை எப்படியும் உரோம் நகருக்கு கொண்டு வரவேண்டும் என துடித்தனர். அவர் விரும்பவில்லையென்றால் பலவந்தப்படுத்தியாவது உரோம் நகருக்கு அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டனர் தலைவர்கள். துறவி கிறகரியும் ஏனையத் துறவிகளும் தங்கள் பயணத்தைத் துவக்கிய மூன்றாம் நாள், வழியிலேயே அவர்களை மடக்கிய மக்கள், உரோம் நகருக்கு அழைத்து வந்தனர். இதுதான் இறைவன் விருப்பம் என்றால் அதையும் ஏற்றுக்கொள்கிறேன் என உரோம் இல்லத்திற்கு திரும்பிவிட்டார், துறவி கிறகரி.

590ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை இரண்டாம்; Pelagius உயிழந்தபோது, உரோமைய அருள்பணியாளர்கள், அதிகாரிகள், மக்கள் என அனைவரும் ஒன்று கூடி புனித அந்திரேயு (St. Andrew) துறவு இல்ல அதிபர் கிறகரியை, அடுத்த திருத்தந்தையாகத் தேர்வு செய்தனர். துறவி கிறகரி இதனை ஏற்கவில்லை. மக்கள் கட்டாயப்படுத்தினர். இவரோ கான்ஸ்தாந்திநோபிள் பேரரசருக்கு தன் மறுப்பு மடலை எழுதி, தன்னை அங்கீகரிக்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொண்டார். அம்மடல் பேரரசருக்கு அனுப்புவதற்கு என உரோம் தலைமை அதிகாரி ஜெர்மானுசிடம் (Germanus) கொடுக்கப்பட்டது. அவர் தந்திரமாக, அதனை குப்பையில் போட்டுவிட்டு, துறவி கிறகரியை திருத்தந்தையாக நியமிக்கும்படி பேரரசருக்கு மடல் எழுதினார்.

பேரரசரின் ஒப்புதல் மடல் ஆறு மாதங்களுக்குப்பின் உரோம் நகரை வந்தடைந்தது. துடித்துப்போனார் துறவி கிறகரி. தான் மறுத்து எழுதியும், தன்னை திருத்தந்தையாக நியமித்துவிட்டாரே என வருந்தினார். துறவு மடத்திலிருந்து தப்பி ஓடினார். மூன்று நாள்கள் காட்டுக்குள் ஒளிந்துகொண்டார். மக்கள் அவரை விடவில்லை.

திருத்தந்தை கிறகரி அவர்களின் அடுத்த நிகழ்வுகளையும், அவர் ஏன், பெரிய கிறகரி என அழைக்கப்படுகிறார் என்பதையும் அடுத்த வாரத்தில் காண்போம்.

13 January 2021, 15:08