தேடுதல்

2021 மார்ச் 19ம் தேதி முதல், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி முடிய, 'அன்பின் மகிழ்வு' மடலை அடிப்படையாகக்கொண்டு, குடும்ப ஆண்டு 2021 மார்ச் 19ம் தேதி முதல், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி முடிய, 'அன்பின் மகிழ்வு' மடலை அடிப்படையாகக்கொண்டு, குடும்ப ஆண்டு 

'மகிழ்வின் மந்திரம்' – புதிய முதல் நிமிடத் தொடர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' என்று பொருள்படும் 'Amoris Laetitia' என்ற திருத்தூது அறிவுரை மடலை அடிப்படையாகக்கொண்டு, கத்தோலிக்கத் திருஅவையில், 'அன்பின் மகிழ்வு' குடும்ப ஆண்டு நடைபெறுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, வத்திக்கான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் முதல் நிமிடத்தில், பல்வேறு பகிர்வுகளை மேற்கொண்டு வந்துள்ளோம். 2010ம் ஆண்டு, நாம் துவங்கிய முதல் நிமிட முயற்சிகள், நாளுமொரு நல்லெண்ணம், வாழ்ந்தவர் வழியில், கவிதைக்கனவுகள், கற்றனைத்தூறும், புனிதரும் மனிதரே, கடுகு சிறுத்தாலும், இது இரக்கத்தின் காலம், பாசமுள்ள பார்வையில், இமயமாகும் இளமை, பூமியில் புதுமை விதையாகும் கதைகள் என்ற தலைப்புக்களில், கதைகளாக, கவிதைகளாக, கருத்துக்களாக, தகவல்களாக, பல வடிவங்களில் இடம்பெற்றன. இந்த வரிசையில், இவ்வாண்டு,  'மகிழ்வின் மந்திரம்' என்ற தலைப்பில், முதல் நிமிட முயற்சியை மேற்கொள்கிறோம்.

2014ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் கூடிய ஆயர்களின் சிறப்பு மாமன்றமும், 2015ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கூடிவந்த உலக ஆயர்கள் மாமன்றமும் 'குடும்பம்' என்ற மையக்கருத்துடன் நடைபெற்றன. இவ்விரு மாமன்றங்களில், ஆயர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, 2016ம் ஆண்டு, திருஅவையில், கருணையின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' என்று பொருள்படும் 'Amoris Laetitia' என்ற திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டார்.

2016ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று திருத்தந்தை கையொப்பமிட்ட 'Amoris Laetitia' மடல், இவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இவ்வேளையில், 2021ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி முதல், 2022ம் ஆண்டு, உரோம் நகரில் இடம்பெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டின் இறுதிநாளான ஜூன் மாதம் 26ம் தேதி முடிய, கத்தோலிக்கத் திருஅவையில், 'அன்பின் மகிழ்வு' மடலை அடிப்படையாகக்கொண்டு, குடும்ப ஆண்டு நடைபெறுகிறது.

அத்துடன், திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். அந்த அறிவிப்பின் 150ம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி முதல், 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முடிய புனித யோசேப்பு ஆண்டாக சிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

குடும்பத்தையும், திருக்குடும்பத்தின் தலைவரான புனித யோசேப்பையும் மையப்படுத்தி நடைபெறும் இவ்விரு கொண்டாட்டங்களையும் மனதில் கொண்டு, வத்திக்கான் வானொலி குடும்பத்தினருடன் முதல் நிமிட சிந்தனையாக 'மகிழ்வின் மந்திரம்' என்ற புதிய முதல் நிமிடத் தொடர் ஒன்றை, இன்று துவக்குகிறோம். இத்தொடரில், 'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) மடல் வழியாகவும், புனித யோசேப்பைக் குறித்து ‘Patris corde’ அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற தலைப்பில் வெளியிட்ட திருத்தூது மடல் வழியாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்படுத்தியுள்ள எண்ணங்களின் அடிப்படையில் முதல் நிமிட சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.

துவங்கியுள்ள 2021ம் ஆண்டில், நாம் ஒவ்வொருவரும் பெறுகின்ற, மற்றும் தருகின்ற மகிழ்வின் மந்திரமாக, மையமாக நம் குடும்பங்கள் அமையட்டும்!

01 January 2021, 14:47