தேடுதல்

பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்  

திருவழிபாடுகள் நிறைவேற்ற பணம் பெறுவதை தவிர்க்குமாறு...

திருவழிபாடுகளை நிறைவேற்ற அருள்பணியாளர்களுக்குப் பணம் கொடுப்பது, வறியோர், அருளடையாளங்களைப் பெறுவதற்குத் தடையாய் உள்ளது – பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், திருப்பலிகள், மற்றும், திருமணம் போன்ற அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்கு, அருள்பணியாளர்களுக்கு பணம் வழங்கும் பழக்கம் இரத்துசெய்யப்படுமாறு, அந்நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும், ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சனவரி 28, இவ்வெள்ளியன்று, பிலிப்பீன்சின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு திருவழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு பணம் பெறும் முறையை இரத்து செய்திருப்பது, திருவிவிலியத்தின்படி, வறியோரை அன்புகூரவேண்டும் என்ற கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளுக்கு ஒத்ததாய் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நாம் ஒருவர் ஒருவருக்கு, குறிப்பாக, நம் ஏழைச் சகோதரர், சகோதரிகளுக்கு, மிகத் தாராளமனத்துடன் பணியாற்றவேண்டும் என்று கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்றுரைத்துள்ள ஆயர்கள், அருள்பணியாளர்களுக்குப் பணம் கொடுப்பது, வறியோர், அருளடையாளங்களைப் பெறுவதற்குத் தடையாய் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். 

ஏழைகளுக்கு எதிரான இந்த நடைமுறையை, அனைத்து மறைமாவட்டங்களும் இரத்து செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், மக்கள், குறிப்பாக, வறியோர், உண்மையான வழிபாடுகளில் பங்குகொள்வதற்குத் தடையாய் இருக்கும் இந்த பழக்கத்தை இரத்து செய்வதற்கு, முழுவீச்சுடன் முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இந்நாள்வரை இத்தகைய நடைமுறை, அந்தந்த மறைமாவட்டங்களின் விருப்பத்திற்கு விடப்பட்டது என்றும், பெரும்பாலான மறைமாவட்டங்கள், திருவழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு பணம் பெற்றுவந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் முன்னாள் தலைவரான, Lingayen-Dagupan பேராயர்  Socrates Villegas அவர்கள், தனது உயர்மறைமாவட்டத்தில், 2015ம் ஆண்டிலே இப்பழக்கத்தை இரத்து செய்துவிட்டார். மேலும், பிலிப்பீன்சில் கிறிஸ்தவம் பரவத்தொடங்கியதன் 500ம் ஆண்டையொட்டி, மனிலா உயர்மறைமாவட்டம், அருள்பணியாளர்களுக்குப் பணம் வழங்கும் பழக்கத்தை இரத்துசெய்துள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2021, 15:26