தேடுதல்

புனித யோசேப்பு புனித யோசேப்பு 

2021ம் ஆண்டு, புனித யோசேப்புக்கு அர்ப்பணிப்பு

சாதாரண தச்சுத் தொழிலாளராகிய புனித யோசேப்பு, திருக்குடும்பத்தின் தலைவராக, அன்னை மரியாவையும், இயேசுவையும் பாதுகாத்தவர் - பேராயர் அர்ஷத்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவை, 2021ம் ஆண்டை, புனித யோசேப்பிற்கு அர்ப்பணித்துள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரான, இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், சனவரி 12, இச்செவ்வாயன்று, தனது உயர்மறைமாவட்ட Ave Maria இணையத்தள தொலைக்காட்சியில் வழங்கிய காணொளிச் செய்தியில், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை அருளாளர் 9ம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டில்  புனித யோசேப்பை உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்ததை, தன் செய்தியில் நினைவுகூர்ந்த பேராயர் அர்ஷத் அவர்கள், புனித யோசேப்பு ஆண்டில், அப்புனிதருக்கு மிகுந்த மரியாதை செலுத்தி, அவர் வழியில் நம் வாழ்வை மாற்றுவோம் என்று, கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புனித யோசேப்பு, கனிவும், அன்பும் நிறைந்த தந்தை, இவர் இயேசுவையும், அவரது குடும்பத்தையும் பாதுகாத்தவர் என்றும், அவர் நேர்மையுள்ள மனிதர், கடவுளின் திட்டத்திற்குப் பிரமாணிக்கமாய் இருந்தவர் என்றும், அவரது வாழ்வு முழுவதும் அன்பாலும், எளிமையாலும் நிறைந்திருந்தது என்றும், பேராயர் அர்ஷத் அவர்கள் கூறியுள்ளார்.

சாதாரண தச்சுத் தொழிலாளராகிய புனித யோசேப்பு, திருக்குடும்பத்தின் தலைவராக, அன்னை மரியாவையும், இயேசுவையும் பாதுகாத்தவர் என்றுரைத்த பேராயர் அர்ஷத் அவர்கள், திருஅவை, மற்றும், மனித சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் துன்புறுவோர் ஆகிய அனைவரையும், அப்புனிதர் பாதுகாக்கிறார் என்று கூறியுள்ளார்.

நம் குடும்பங்களையும், நம் அனைவரையும் ஆசிர்வதிக்குமாறு புனித யோசேப்பிடம் இறைவேண்டல் செய்து, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார், பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் அர்ஷத்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வெளியிட்ட “ஒரு தந்தையின் இதயத்தோடு” (Patris corde) என்ற திருத்தூது மடல் வழியாக, புனித யோசேப்பு ஆண்டை (8 டிச. 2020 - 8 டிச. 2021) அறிவித்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2021, 14:04