தேடுதல்

Vatican News
இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி 

அருள்பணி சுவாமி - நூறு நாள்களாக அநீதியான சிறைவாசம்

இந்தியாவின் நீதிமன்றங்களில், மனிதாபிமானப் பற்றாக்குறை நிலவுகிறது. அருள்பணி சுவாமி அவர்களின் விடுதலைக்காக, பல இந்தியக் குடிமக்களும், பன்னாட்டு குழுமங்களைச் சார்ந்தவர்களும் குரல்எழுப்பி வருகின்றனர் – அருள்பணி பிரகாஷ் சே.ச.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் பழங்குடி இன மக்களுக்காக பல ஆண்டுகளாக உழைத்துவந்த, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை கைது செய்ததும், அவருக்கு சிறைத்தண்டனை விதித்ததும், இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய கொள்கைகளை மீறுவதாக உள்ளன என்று, கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தோடு தொடர்படுத்தி கைது செய்தது குறித்து, ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்துள்ள, மனித உரிமை ஆர்வலரான இயேசு சபை அருள்பணி செட்ரிக் பிரகாஷ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடி இன மக்களின் வன உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்திருந்தவர் என்றும், அவர் மும்பையில் Taloja சிறையில் அடைக்கப்பட்டு நூறு நாள்களுக்குமேல் ஆகியுள்ளவேளை, அவர் பலவீனமாய் மற்றும், நோயுற்று உள்ளார் என்றும், அருள்பணி பிரகாஷ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆயினும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தனது ஆழமான ஆன்மீகத்திலும், நேர்மறை எண்ணத்திலும் உறுதியாய் இருக்கிறார் என்றும், அவரின் விடுதலைக்காக, பல இந்தியக் குடிமக்களும், பன்னாட்டு குழுமங்களைச் சார்ந்தவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்றும், இந்திய நீதிமன்றங்களில், மனிதாபிமானம், பெருமளவு குறைந்துள்ளது என்றும், அருள்பணி பிரகாஷ் அவர்கள் கூறியுள்ளார்.

பார்க்கின்சன்ஸ் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோயால் துன்புறும், 83 வயது நிறைந்த  அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் கெரில்லாக்களுடன் தொடர்புள்ளவர் என்றும், 2018ம் ஆண்டு சனவரியில் தொடங்கிய Bhima-Koregaon வன்முறையில் அவர் ஈடுபட்டார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார், ஆனால், உண்மையில், அவர், Bhima-Koregaon சென்றதே இல்லை என்று, அருள்பணி பிரகாஷ் அவர்கள் கூறியுள்ளார்.

Bhima-Koregaon வன்முறைக்கு உண்மையிலேயே காரணமானவர்கள், நாட்டை ஆள்பவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களைக் கைதுசெய்வதற்குப் பதில், குற்றமற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

15 January 2021, 14:15