தேடுதல்

Vatican News
சிரியா சிரியா  (ANSA)

பிறரன்பு ஆயுதம் சமுதாய காயங்களைக் குணப்படுத்தும்

வருகிற மார்ச் மாதத்தில், திருத்தந்தை ஈராக்கிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் மத்தியக் கிழக்கில் வாழ்கின்ற அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்ல செய்தி - கர்தினால் செனாரி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போர், அந்நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், புதிய கொரோனா பெருந்தொற்று கடுமையாக்கியுள்ள நலவாழ்வு பிரச்சனை போன்றவற்றால், நாட்டு மக்கள், பொருளாதார மற்றும், சமுதாயக் காயங்களால் புண்பட்டுள்ளனர் என்று, திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிரியாவுக்கு திருப்பீட தூதராகப் பணியாற்றும், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள், சிரியாவில் கத்தோலிக்க நிறுவனங்கள் ஆற்றும் பணிகள் பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கியபோது, நம்பிக்கையை இழந்ததுபோல் காணப்படும் சிரியாவில், நம்பிக்கையின் சூழலை மீள்கட்டமைக்க, கத்தோலிக்க நிறுவனங்களின் பணிகள் இன்றியமையாதவை என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூற்றுப்படி, சிரியாவில் 83 விழுக்காட்டு மக்கள், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்றும், தடைகளுக்கு மேல் தடைகள் எதிர்நோக்கப்படும் ஒரு சூழலில், இளையோர், அந்நாட்டில், தொடர்ந்து வாழ்வதுபற்றி சிந்தித்து வருகின்றனர் என்றும் கூறிய கர்தினால் செனாரி அவர்கள், இளையோருக்கு நம்பிக்கை நிறைந்த சூழல் உருவாக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போரால் ஏற்கனவே நொந்துபோயுள்ள மக்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் உடலளவில்  கடுந்துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும், தடுப்பூசிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளன என்றும், பத்து ஆண்டுகளாக வீசப்படும் குண்டுகளும், ஆயுத மோதல்களும், ஜிகாதிகளின் வன்முறைகளும், நாட்டின் நலவாழ்வு அமைப்பை சீரழித்துள்ளன என்றும், கர்தினால் செனாரி அவர்கள் தெரிவித்தார்.

இத்தகைய ஒரு சூழலில், வருகிற மார்ச் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் மிக முக்கியமானது என்றும், இந்நிகழ்வு, மத்தியக் கிழக்கில் வாழ்கின்ற அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், நல்லதொரு செய்தி என்றும், கர்தினால் செனாரி அவர்கள் எடுத்துரைத்தார். (AsiaNews)

08 January 2021, 14:55