தேடுதல்

Vatican News
கோவிட் தடுப்பூசி கோவிட் தடுப்பூசி   (ANSA)

தடுப்பூசி போடுவது, ஓர் அறநெறி சார்ந்த கடமை

நியுஸிலாந்து ஆயர்கள் : உயிரிழப்புகளுக்கு காரணமான தொற்றுநோய்களை உலகிலிருந்து ஒழித்து, மக்கள் இனத்தை காப்பாற்ற தடுப்பூசிகள் உதவியுள்ளதை, வரலாற்றில் கண்டுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து பாதுகாப்பு வழங்கும் தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்வது, நன்னெறி கடமையாகும் என்று அறிவித்துள்ளனர், நியுஸிலாந்து ஆயர்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில், கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது, போட்டுக்கொள்பவருக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றிவாழும் மக்களுக்கும் உதவும் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, தங்கள் செய்தியை வெளியிட்டுள்ள நியுஸிலாந்து ஆயர்கள், இது, ஒரு நன்னெறி கடமையாக நோக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

எண்ணற்ற மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமான தொற்றுநோய்களை, உலகிலிருந்து ஒழித்து, மக்கள் இனத்தை காப்பாற்ற, தடுப்பூசிகள் உதவியுள்ளதை வரலாற்றில் கண்டுள்ளோம் எனக்கூறிய நியுஸிலாந்து ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் John Dew அவர்கள், தற்போது பல மருத்துவ வல்லுநர்கள், அறியவியலாளர்கள், மற்றும், அறநெறி சார்பு வல்லுனர்களிடம் ஆலோசனைப் பெற்றே, இந்த கோவிட் தடுப்பூசிக்கு, ஆயர் பேரவை, முழு ஆதரவு தருவதாகக் கூறினார்.

2019-20ம் ஆண்டுகளில்  நியுஸிலாந்தில் தட்டம்மை நோய் பரவியபோது, 80 விழுக்காட்டு மக்கள் மட்டுமே தடுப்பூசியை ஏற்றுக்கொண்டதால், பெருமளவில், குழந்தைகள் உட்பட, 80க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை நாடு சந்திக்கவேண்டியிருந்தது என்பதையும், கர்தினால் Dew அவர்கள் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்கர்கள் உட்பட, அனைத்துமக்களும், கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல, பிறருடைய நலத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் என, மீண்டும், மீண்டும், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார், கர்தினால் Dew.

நியுஸிலாந்து நாட்டில் இதுவரை 2,228 பேர், கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

14 January 2021, 14:22