தேடுதல்

சிரியாவில் கிறிஸ்தவர்கள் சிரியாவில் கிறிஸ்தவர்கள் 

சிரியாவுக்கெதிரான தடைகள் அகற்றப்பட பைடன் அவர்களுக்கு...

ஒரு காலத்தில், மத்திய கிழக்குப் பகுதிக்கு உணவு வழங்கிவந்த சிரியா நாடு, பத்து ஆண்டுகளாக மேலாக இடம்பெறும் போரால், தற்போது, கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கின்றது – மத்தியக் கிழக்கு திருஅவை தலைவர்கள்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டின் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமாறு, மத்தியக் கிழக்குப் பகுதியின் திருஅவைத் தலைவர்களும், பன்னாட்டு முக்கிய ஆர்வலர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவர், திருவாளர் ஜோசப் பைடன் அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

ஏறத்தாழ நூறு அரசியல், சமுதாய மற்றும், சமயத் தலைவர்கள் கையெழுத்திட்ட மனுவை, மத்தியக் கிழக்குத் திருஅவைகள் அவையின் செயலர் Michel Abs அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46வது அரசுத்தலைவராகப் பணியைத் துவக்கியுள்ள பைடன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

சிரியா மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றி,  அந்நாட்டில் நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளைக் களையுமாறு, பைடன் அவர்களை வலியுறுத்தியுள்ள அத்தலைவர்கள், இந்த நெருக்கடிகள், மத்தியக் கிழக்கில், புதியதொரு நிலையற்றதன்மை உருவாகும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு காலத்தில், மத்திய கிழக்குப் பகுதிக்கு உணவு வழங்கிவந்த சிரியா நாடு, பத்து ஆண்டுகளாக இடம்பெறும் போரால், தற்போது கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கின்றது என்றும், அத்தலைவர்களின் மனு கூறுகின்றது.

கடந்த டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறப்புப் பிரதிநிதி Alena Douhan அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு விடுத்திருந்த விண்ணப்பத்தில், சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், அம்மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளன என்று சொல்லி, அத்தடைகளை இரத்துசெய்யுமாறு கேட்டிருந்தார் என்பது, இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாக் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Ignace Joseph III Younan, மெல்கித்தே கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Joseph Absi, சிரியாக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை Ignatius Aphrem II ஆகியோர் உட்பட ஏறத்தாழ நூறு பேர் கையெழுத்திட்டு, சனவரி 21, இவ்வியாழனன்று அனுப்பப்பட்டுள்ள இந்த மனுவில், பைடன் அவர்களுக்கு தங்களின் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2021, 15:23