தேடுதல்

Vatican News
லெபனான் - முதுபெரும்தந்தை கர்தினால் Bechara Boutros Rai லெபனான் - முதுபெரும்தந்தை கர்தினால் Bechara Boutros Rai 

மக்கள் மன்னிக்கமாட்டார்கள், வரலாறு மறக்கப்படக் கூடாது

லெபனான் நாட்டின் குழப்பத்திற்கு காரணமாக இருக்கின்ற அரசியல் கட்சிகளும், அதிகாரத்தில் உள்ள குழுக்களும், பிரிவினைவாத உணர்வுகளைப் பின்தள்ளி, லெபனானைக் காப்பாற்ற அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மக்கள் மன்னிக்கமாட்டார்கள், மற்றும், வரலாறு மறக்கப்படக்கூடாது என்று, லெபனான் நாட்டின், கிறிஸ்தவ மற்றும், முஸ்லிம் சமுதாயங்களின் முக்கிய பிரதிநிதிகள் இணைந்து, அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

லெபனான் மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை கர்தினால் Bechara Boutros Rai, லெபனான் இஸ்லாம் மதத் தலைவர் Sheikh Abd al-Amir Qabalan, Shiite இஸ்லாம் பிரிவின் அவைத் தலைவர் Sheikh Akl Naim Hassan, பெய்ரூட் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் பேராயர் Elias Audi ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள செய்தியில், அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் லெபனான் நாட்டைக் காப்பாற்றுவதற்கு, விரைவில் அரசை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில், மேலும் மோதல்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், அரசியல்வாதிகள், நாட்டின் அரசியல் அமைப்பிற்குத் தங்களை அர்ப்பணித்து, மனித மாண்பைப் பாதுகாத்து, நல்லிணக்க உணர்வில் பொது மக்களின் நலனுக்காக உழைக்குமாறு, அந்த பிரதிநிதிகளின் செய்தி வலியுறுத்துகிறது.

லெபனான் நாடு, பெரும் குழப்பநிலைக்கு உள்ளாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற அரசியல் கட்சிகளும், அதிகாரத்தில் உள்ள குழுக்களும், பிரிவினைவாத உணர்வுகளைப் பின்னுக்குத்தள்ளி, கேதார் மரங்களின் பூமியாகிய லெபனான் பிளவுபடுவதிலிருந்து காப்பாற்றுமாறு, அச்செய்தி அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, லெபனானில், இவ்வியாழன் மற்றும், இவ்வெள்ளி நாள்களுக்கு இடைப்பட்ட இரவில், போராட்டகாரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஒருவர் இறந்துள்ளார் மற்றும், 220க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். (Fides)

30 January 2021, 15:28