தேடுதல்

Vatican News
புனித யோசேப்பு திரு உருவச் சிலை புனித யோசேப்பு திரு உருவச் சிலை 

மகிழ்வின் மந்திரம் - உறங்கும் யோசேப்பு

குழப்பத்திலும் நன்றாகத் தூங்கும் வரம் பெற்றவராக இருந்த யோசேப்பு, இன்று, "உறங்கும் யோசேப்பு" எனும் பெயரில், அனைத்து இல்லங்களையும் அலங்கரிக்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள்' என்று தொடங்கும் முதல் நிகழ்வில், கதாநாயகனாக இருப்பவர், யோசேப்பு. மற்ற நற்செய்தியாளர்களைவிட யோசேப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் மத்தேயு ஒருவரே.

மண ஒப்பந்தமாகியிருந்த மரியாவும் யோசேப்பும், கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரியவருகிறது. திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண் கருவுற்றால் அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மரியா இவ்வாறு கருவுற்றிருப்பதை, தான் வெளியே சொன்னால், மரியாவுக்கும் அதே தண்டனை கிடைக்கும். மேலும், கருவுற்ற மரியாவை ஏற்றுக்கொள்ளவும் கடினமாக இருந்தது. ஆக, மறைவாக விலக்கிவிட, அதாவது, வேறு ஏதாவது காரணம் சொல்லி விலக்கிவிட  திட்டமிடுகின்றார் யோசேப்பு.

இவரின் திட்டம் இப்படி இருக்க, இறைத்திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.

மேற்காணும் குழப்பத்தில் இருந்தவர் அப்படியே தூங்கிப் போகின்றார். மனம் குழப்பமாக இருக்கும்போது, தூங்கி எழுந்தால் தெளிவு கிட்டும் என்பது அனுபவ உண்மை. இங்கு, குழப்பத்திலும் நன்றாகத் தூங்கும் வரம்பெற்றவராக யோசேப்பு உள்ளார். தூங்கியவருக்கு கனவில் விடை கிடைக்கிறது.

கனவை, 'கனவுதானே!' என எடுக்காமல், அதனை இறைக் கட்டளையாக ஏற்கிறார்.

'யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்', என நிறைவு செய்கிறார் மத்தேயு.

கனவின் வழியாகவே, இறைத்திட்டங்களை அறிந்து கொண்டவர் என்பதால்தானோ என்னவோ, சமீபகாலங்களில் "உறங்கும் யோசேப்பு" அனைத்து இல்லங்களையும் அலங்கரிக்கிறார்.

24 January 2021, 16:32