தேடுதல்

Vatican News
புனித யோசேப்பு புனித யோசேப்பு 

மகிழ்வின் மந்திரம் - புனித யோசேப்பு, கனவுகளின் மனிதர்

மும்முறை கனவுகளின் வழி இறைவிருப்பத்தை அறிந்து, அதற்கு முற்றிலுமாகப் பணிந்த புனித யோசேப்பு, நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் ஒருமுறை புனித யோசேப்பு குறித்து கூறிய வார்த்தைகளை இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

யோசேப்பு, ஒரு நீதிமான், சட்டத்தைக் கடைப்பிடிப்பவர், தொழிலாளர், தாழ்மையுள்ளவர், மரியாவுக்கு மணஒப்பந்தமானவர் என்று, அவரைப் பற்றி திருவிவிலியம் வழியாக அறிய வருகிறோம். யோசேப்பு அவர்களின் பணியை கடவுள் வெளிப்படுத்திய பின்னர், மறுபேச்சுக்கு இடம்தராமல், அமைதியாக, இறைமகனின் வளர்ச்சியில் துணையிருந்தார். ஒரு வார்த்தையும் சொல்லாமல், அமைதியில் எவ்வாறு உடன்பயணிப்பது என்பதுபற்றி அறிந்திருந்த புனித யோசேப்பு அவர்கள், கனவுகளின் மனிதர். கனவு காண்பதற்கும், இன்னல்கள் எதிர்வந்தாலும், நம்பிக்கையோடு வருங்காலத்தை திறந்த மனதுடன் ஏற்பதற்கும் உள்ள சக்தியை நாமும் இழக்காதிருப்போம்.

நாம் ஒவ்வொருவரும், நம் குடும்பம், நம் பிள்ளைகள், நம் பெற்றோர் போன்றோரின் வாழ்வு எவ்வாறு அமையவேண்டும் என்று கனவு காண்கிறோம், அருள்பணியாளர்களும் தங்களின் இறைமக்கள்பற்றி கனவு காண்கின்றனர். இவ்வாறு கனவு காண்பதில், இளையோரைப் போன்று, வெட்கப்படாமல் கனவு காணுங்கள். (18 டிசம்பர் 2018)

கன்னிமரியாவின் கணவரும், இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித யோசேப்பைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே சொல்கிறது. 'நீதிமான்' என்ற வார்த்தை, அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் என்பதைக் காட்டுகிறது. தச்சுத்தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி, குடும்பத்தை நல்லமுறையில் நடத்தினார். கன்னிமரியா, குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு இடம்தேடி அலைந்தபோதும், குழந்தையை, கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க, எகிப்துக்கு ஓடிச் சென்றபோதும் பல இன்னல்களை தாங்கிக்கொண்டார். இதன் வழியாக, இயேசுவின் மீட்புப்பணியில் தன்னையும் இணைத்துகொண்டார், புனித யோசேப்பு.

மரியாவை விலக்கிவிட எண்ணியபோது, கடவுளின் தூதர் கனவின் மூலம் கடவுளின் திருவுளத்தை யோசேப்பிடம் எடுத்துச்சொன்னதும், அவர், தன்னுடைய மனைவி மரியாவை ஏற்றுக்கொள்வதன் வழியே, கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தொடங்குகின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொலை செய்ய முயன்றபோது, கனவில் எச்சரிக்கப்பட்டு, குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். ஏரோது மன்னன் இறந்தபோது, மீண்டும் கனவில் அறிவிக்கப்பட்டு, எகிப்திலிருந்து திரும்புகிறார். மும்முறையும் கனவுகளின் வழி இறைவிருப்பத்தை அறிந்து, அதற்கு முற்றிலுமாகப் பணிந்த புனித யோசேப்பு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?

நாமும் யோசேப்பைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மையே கையளித்து, அதற்குப் பணிந்து நடந்தால் இயேசு கண்ட இறையாட்சி கனவு நனவாகும் என்பது உறுதி.

24 January 2021, 16:25