தேடுதல்

Vatican News
புனித யோசேப்பு புனித யோசேப்பு 

மகிழ்வின் மந்திரம் – திருஅவை வரலாற்றில் புனித யோசேப்பு

1480 மார்ச் 19ந்தேதி முதல் உரோமையில் சிறப்பிக்கப்பட்டு வந்த புனித யோசேப்பு விழாவை, திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், 1570ம் ஆண்டில் திருஅவை முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித யோசேப்பு, இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இவர், தமிழ் மரபில், ‘சூசையப்பர்’, ‘வளனார்’, ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; முதுபெருந்தந்தையர்களில் ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

கி.பி. 2ம் நூற்றாண்டில் இறையன்னை மரியாவின் கன்னிமையைக் காக்கின்ற விதத்தில், புனித யோசேப்பு, வயதில் முதிர்ந்தவராக சித்தரிக்கப்பட்டதாகவும், 4ம் நூற்றாண்டில் முதன்முதலாக எகிப்து நாட்டு கோப்திய கிறிஸ்தவர்கள், ‘தச்சரான புனித யோசேப்பு’ என்ற விழாவை ஜூலை 20ந்தேதி கொண்டாடியதாகவும் வரலாற்றில் காண்கிறோம்.

1414ம் ஆண்டில் கூடிய கொன்ஸ்தான்ஸ் பொதுச்சங்கத்தில், புனித யோசேப்பு குறித்து இறையியலாளர் ஜெர்சோன் வழங்கிய இறையியல் பார்வை, கத்தோலிக்கத் திருஅவையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1479ல் திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் அவர்கள், புனித யோசேப்பு விழாவை உரோமை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார். 1480 மார்ச் 19ந்தேதி முதல் உரோமையில் சிறப்பிக்கப்பட்டு வந்த இவ்விழாவை, செபமாலையின் திருத்தந்தை என அறியப்படும், திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், 1570ம் ஆண்டில் திருஅவை முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.

புனித யோசேப்பின் முதல் மன்றாட்டுமாலை, 1597ம் ஆணடில் உரோமையில் வெளியானது. 1621ம் ஆண்டு, மே 8ந்தேதி திருத்தந்தை 15ம் கிரகரி அவர்கள், புனித யோசேப்பு விழாவை கடன் திருநாளாக மாற்றினார். 19ஆம் நூற்றாண்டில் புதன்கிழமை, மற்றும், மார்ச் மாதத்தில் புனித யோசேப்பை சிறப்பாக நினைவுகூரும் வழக்கம் தோன்றியது. 1870ம் ஆண்டு, டிசம்பர் 8ந்தேதி திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், ‘புனித யோசேப்பு, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலர்’ என அறிவித்தார். 1889ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், புனித யோசேப்புக்கு மார்ச் மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்தும் வழக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கினார். 1955ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ‘தொழிலாளரான புனித யோசேப்பு’ விழாவை மே 1ம் தேதி சிறப்பிக்கும் விதத்தில் அறிமுகம் செய்தார்.

1962ம் ஆண்டில் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை இணைத்தார். 1969ம் ஆண்டில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் சீரமைத்த நாள்காட்டியின்படி, ‘கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு’ திருநாள் மார்ச் 19ம் தேதி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2013ம் ஆண்டு, மே 1ம் தேதி, திருப்பலியின் மற்ற நற்கருணை மன்றாட்டுகளிலும், புனித யோசேப்பின் பெயரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்தார். 2020ம் ஆணடு, டிசம்பர் 8ம் தேதி, ‘தந்தையின் இதயத்தோடு’ என்ற திருத்தூது மடலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று முதல் 2021 டிசம்பர் 8ம் தேதி வரை, ‘புனித யோசேப்பு ஆண்டாக’ சிறப்பிக்க ஆணையிட்டார்.

30 January 2021, 15:00