தேடுதல்

Vatican News
லிங்கன் நினைவிடத்தில் கர்தினால் வில்டன் கிரகரி மேற்கொண்ட செப வழிபாடு லிங்கன் நினைவிடத்தில் கர்தினால் வில்டன் கிரகரி மேற்கொண்ட செப வழிபாடு  (AFP or licensors)

ஆலய வழிபாடு - மக்கள் அவை, செனட் அவை தலைவர்களுக்கு அழைப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராகப் பொறுப்பேற்கும் திருவாளர் ஜோ பைடன் அவர்கள், தன் பதவியேற்பு நிகழ்வுக்கு முன் நடைபெற்ற ஆலய வழிபாடு ஒன்றில் கலந்துகொள்ள, அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 20, இப்புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராகப் பொறுப்பேற்கும் திருவாளர் ஜோ பைடன் அவர்கள், தன் பதவியேற்பு நிகழ்வுக்கு முன் நடைபெற்ற ஆலய வழிபாடு ஒன்றில் கலந்துகொள்ள, மக்கள் அவை, மற்றும் செனட் அவை தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

வாஷிங்டன் பெருநகரில் அமைந்துள்ள திருத்தூதர் புனித மத்தேயு ஆலயத்தில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள, மக்கள் அவையின் பெரும்பான்மைத் தலைவர், Nancy Pelosi, சிறுபான்மைத் தலைவர், Kevin McCarthy, செனட் அவையின் பெரும்பான்மைத் தலைவர், Mitch McConnell, சிறுபான்மைத் தலைவர் Chuck Schumer ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டது.

அமெரிக்க அரசுத்தலைவராகப் பணியாற்றிய ஜான் கென்னடி அவர்களுக்கு அடுத்ததாக, அரசுத்தலைவர் பொறுப்பேற்கும் அடுத்த கத்தோலிக்கர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சனவரி 19, இச்செவ்வாயன்று, வாஷிங்டனில் அமைந்துள்ள லிங்கன் நினைவிடத்தில் வாஷிங்டன் பேராயர், கர்தினால் வில்டன் கிரகரி அவர்கள், மேற்கொண்ட செப வழிபாட்டில், அரசுத்தலைவராகப் பணியேற்கும் ஜோ பைடன் அவர்களும், உதவி அரசுத்தலைவராகப் பணியேற்கும் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் கலந்துகொண்டனர் என்று, CNA செய்தி கூறுகிறது.

இந்த வழிபாட்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக உயிரிழந்த 4,00,000 அமெரிக்கர்களுக்காக சிறப்பான இறைவேண்டலை கர்தினால் கிரகரி அவர்கள் மேற்கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, அண்மைய மாதங்களாக அடைந்துள்ள காயங்கள் குணமடையவேண்டும் என்றும், இந்தக் காயங்களைக் குணமாக்க இறைவனின் உதவியைத் தேடி இங்கு கூடிவந்துள்ளோம் என்றும், ஜோ பைடன் அவர்கள் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் நடுவே பணியாற்றிவரும் Lori Marie Key என்ற மருத்துவப் பணியாளர், “Amazing Grace” என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடி, இந்த வழிபாட்டினை நிறைவு செய்தார். (CNA)

20 January 2021, 15:16