தேடுதல்

அரசுத்தலைவர் ஜோ பைடன் பதவியேற்பில் இறைவேண்டல் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் அருள்பணி Leo O'Donovan S.J. அரசுத்தலைவர் ஜோ பைடன் பதவியேற்பில் இறைவேண்டல் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் அருள்பணி Leo O'Donovan S.J. 

பைடன் பதவியேற்பில் இயேசுசபை துறவி இறைவேண்டல்

அரசுத்தலைவராக, திருவாளர் ஜோ பைடன் அவர்கள், பதவியேற்கும் நிகழ்வில், இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் இறைவேண்டல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 46வது அரசுத்தலைவராக, திருவாளர் ஜோ பைடன் அவர்கள், சனவரி 20ம் தேதி, வருகிற புதனன்று பதவியேற்கும் நிகழ்வில், இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் இறைவேண்டல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பெருநகரில், இயேசு சபையினர் நடத்திவரும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய அருள்பணி Leo O'Donovan அவர்கள், ஜோ பைடன் அவர்களின் பதவியேற்பு நிகழ்வில் இறைவேண்டல் செய்வதற்கு, பைடன் அவர்களே தன்னை அழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஜோ பைடன் அவர்களின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பரான அருள்பணி O'Donovan அவர்கள், தற்போது, புலம்பெயர்ந்தோருக்கென இயேசு சபையினர் ஆற்றிவரும் பணிகளின் இயக்குனராகப் பணியாற்றிவருகிறார்.

40 ஆண்டுகளுக்குமுன், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் தலைவராக பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர் Timothy Healy அவர்கள், 1985ம் ஆண்டு, அரசுத்தலைவர் Ronald Reagan அவர்களின் பதவியேற்பு விழாவில் இறைவேண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு வரலாற்றில், 1961ம் ஆண்டு, கத்தோலிக்கரான ஜான் கென்னடி அவர்கள், முதல்முறையாக பதவியேற்ற நேரத்தில், அவ்வேளையில், பாஸ்டன் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பணியாற்றிய கர்தினால் Richard Cushing அவர்கள் இறைவேண்டல் செய்தார்.

சனவரி 6ம் தேதி, வன்முறையாளர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் இடம்பெற்ற Capitol தலைமையகத்தில், சனவரி 20ம் தேதி நடைபெறவிருக்கும் பதவியேற்பு நிகழ்வு, குறைந்த அளவு பங்கேற்பாளர்களின் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (UCAN)

13 January 2021, 14:33