தேடுதல்

Vatican News
ஜப்பானில் 2ம் உலகப்போர் நினைவு நாள் ஜப்பானில் 2ம் உலகப்போர் நினைவு நாள்   (AFP or licensors)

அணு ஆயதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு...

1945ம் ஆண்டில் நாகசாகி நகரின் மீது போடப்பட்ட அணுகுண்டால், உடனடியாக ஏறத்தாழ எழுபதாயிரம் பேரும், அது நடந்து ஒரு மாதம் சென்று, மேலும் 75 ஆயிரம் பேரும் இறந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 22ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ள, அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தை (TPNW) வரவேற்றுள்ள அதேவேளை, அதில், தங்கள் நாடுகள் கையெழுத்திட்டு, செயல்படுத்துமாறு, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும், நாகசாகி நகரங்களின் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுகுண்டுகளால் தாக்கப்பட்ட நகரங்களின் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும், ஜப்பானிய குடிமக்கள் என்ற முறையில், ஜப்பான் நாடு, இந்த உலகளாவிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் இல்லாத ஓர் உலகை அமைப்பது இயலக்கூடியதே மற்றும், மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கு, அது தேவையானது என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், நாங்களும் இணைவதாகத் தெரிவித்துள்ள ஆயர்கள், ஜப்பான், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பது, ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

1945ம் ஆண்டில் நாகசாகி நகரில் போடப்பட்ட அணுகுண்டால், உடனடியாக ஏறத்தாழ எழுபதாயிரம் பேரும், அது நடந்து ஒரு மாதம் சென்று, மேலும் 75 ஆயிரம் பேரும்  இறந்தனர். ஜப்பானில் கத்தோலிக்கத்தின் மையமாக விளங்கும் நாகசாகி நகரில் அச்சமயத்தில் வாழ்ந்த 12 ஆயிரம் கத்தோலிக்கரில், 8,500 பேர் அணுகுண்டுக்குப் பலியாகினர்.

மேலும், அணு ஆயுதங்களை ஒழிப்பது, உலக அமைதிக்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவும் என்று சொல்லி, ஆஸ்திரேலிய அரசு, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, செயல்படுத்துமாறு, அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

30 January 2021, 15:29