மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், சனவரி 21, இவ்வியாழனன்று அடுத்தடுத்து நடந்த, இரண்டு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு, உலக அளவில், அரசியல் மற்றும், சமயத் தலைவர்கள், தங்களின் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளவேளை, அந்நாட்டில், ஒப்புரவிற்கு அழைப்பு விடுத்துள்ளார், தலத்திருஅவை தலைவர் ஒருவர்.
பாக்தாத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், ஈராக்கில் அனைத்து குடிமக்களும் மாண்போடு வாழ்வதற்கு உறுதி வழங்கவேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளார்.
18 ஆண்டுகளாக போர் மற்றும், துன்பங்களை அனுபவித்துள்ள ஈராக்கில், அமைதி, மற்றும், பாதுகாப்பு நிலவுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியதும், பிரிவினைவாதப் போக்குகளைக் களைந்து ஒப்புரவை நோக்கி மக்களை நடத்திச் செல்லவேண்டியதும், அரசின் கடமை என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சட்டங்களை மதித்தல், குடிமக்கள் கலாச்சாரத்தைப் பேணுதல், பன்மைத்தன்மையை மதித்தல், சகிப்புத்தன்மை கொண்டிருத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய, நலமான மற்றும், உறுதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு, குடிமக்கள் எல்லாரும் மிகுந்த ஆர்வத்தோடு அர்ப்பணிப்பதற்கு இதுவே நேரம் என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் உரைத்துள்ளார்.
2014ம் ஆண்டில், பன்னாட்டு அளவில் வெளிச்சத்திற்கு வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, சிரியாவின் கிழக்கு மற்றும், ஈராக்கின் மேற்கிற்கு இடைப்பட்ட 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை, தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அந்த அமைப்பு, ஏறத்தாழ எண்பது இலட்சம் மக்களை வன்முறையோடு அச்சத்திலும் வைத்திருக்கின்றது.
பாக்தாத்தில், சனவரி 21, இவ்வியாழனன்று அடுத்தடுத்து நடந்த, இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)