தேடுதல்

"புதிய பொருளாதாரம்"  இணையவழி கூட்டம் "புதிய பொருளாதாரம்" இணையவழி கூட்டம் 

"புதிய பொருளாதாரத்திற்கு" கடன்கள் இரத்துசெய்யப்படவேண்டும்

உலக மக்கள் தொகையில் 91.7 விழுக்காட்டினர், உலகின் செல்வங்களில் 17 விழுக்காட்டையும், அதேநேரம், 0.7 விழுக்காட்டினர், 41 விழுக்காட்டையும் கொண்டிருக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிந்துரைத்துள்ள, “புதியதொரு பொருளாதாரத்தை” ஊக்குவித்து, கட்டியெழுப்புவதற்கு, வறிய நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படுவது மிகவும் முக்கியம் என்று, வத்திக்கானின் பீதேஸ் செய்தியிடம், பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னெடுத்துள்ள "புதிய பொருளாதாரம்" பற்றி பீதேஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள, உலகளாவிய ஒத்துழைப்பு, மற்றும், நலவாழ்வு விவகாரத்தில் வல்லுனரான Nicoletta Dentico அவர்கள், உலகின் மிக வறிய நாடுகள், தங்களின் வெளிநாட்டுக் கடன்களால், எப்போதும் சமத்துவமற்ற ஒரு நிலையில் உள்ளன என்றும், வறிய நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படுவதற்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

2013ம் ஆண்டில், சுவிஸ் வங்கி, உலகின் சமத்துவமற்றநிலை பற்றி வெளியிட்ட விவரங்களைச் சுட்டிக்காட்டிய Dentico அவர்கள், உலக மக்கள் தொகையில் 91.7 விழுக்காட்டினர், உலகின் செல்வங்களில் 17 விழுக்காட்டையும், அதேநேரம், 0.7 விழுக்காட்டினர், 41 விழுக்காட்டையும் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

2013ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, பணக்கார மற்றும், வறிய நாடுகளுக்கும் இடையே, வட்டி செலுத்துகின்ற மற்றும், வட்டி செலுத்தாத நாடுகளுக்கு இடையே, அதே சமத்துவமற்ற நிலையே நிலவுகின்றது என்றும், இந்நிலை விரிந்துகொண்டே செல்கின்றது என்றும், Dentico அவர்கள் தெரிவித்தார்.

வளங்கள் குறைவுபடுகின்றன என்ற செய்தியையே நாம் எப்போதும் கேட்கிறோம், ஆனால், கடன்களில், 21 ஆயிரம் பில்லியன் முதல், 36 ஆயிரம் பில்லியன் டாலர்கள் மறைந்துகிடக்கின்றன என்பதுதான் எதார்த்தம் என்றுரைத்துள்ள Dentico அவர்கள், இந்த நிதி அனைத்தும், பொதுவான நன்மைக்குப் பயன்படும் முறையில், விநியோகத்திற்கு விடப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரான்சிஸ் பொருளாதாரம் என்ற பெயரில், 2020ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடைபெற்ற உலகளாவிய இணையவழி கூட்டத்தில் கலந்துகொண்ட, 120 நாடுகளின் இரண்டாயிரத்திற்கு அதிகமான இளம் தொழில்முனைவோரும், வர்த்தகர்களும், கடன்சுமை அகற்றப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2021, 14:07