தேடுதல்

Vatican News
எகிப்து நாட்டிற்கு தப்பித்துச் செல்லும் திருக்குடும்பம் எகிப்து நாட்டிற்கு தப்பித்துச் செல்லும் திருக்குடும்பம் 

எகிப்தில் "திருக்குடும்பத்தின் பாதை" - சனவரி 7, பணிகள் துவக்கம்

எகிப்து நாட்டில் 25 இடங்களை இணைத்து, 3,500 கி.மீ. தூரம் கொண்ட "திருக்குடும்பத்தின் பாதை", உலகிலுள்ள அனைத்து திருப்பயணப் பாதைகளில் மிக நீளமான பாதையாக இருக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"திருக்குடும்பத்தின் பாதை" என்ற ஒரு பெரும் முயற்சி, எகிப்து நாடு, இவ்வுலகிற்கு, குறிப்பாக, கிறிஸ்தவ உலகிற்கு வழங்கும் கிறிஸ்மஸ் பரிசு என்று, அந்நாட்டின் அரசு அதிகாரி ஒருவர், வலைத்தளம் வழியே வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியால், உலகெங்கும் சுற்றுலா துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், 2021ம் ஆண்டின் துவக்கத்தில், எகிப்து அரசு, "திருக்குடும்பத்தின் பாதை" என்ற முயற்சியைத் துவங்கியுள்ளது என்று, அந்நாட்டு அரசின் பன்னாட்டு உறவுகள் துறையின் இயக்குனர், Adel al Gindy அவர்கள் கூறியுள்ளார்.

எகிப்து நாட்டில், காப்டிக் கிறிஸ்தவர்கள், சனவரி 7, இவ்வெள்ளியன்று தங்கள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வேளையில், இயேசுவின் திருக்குடும்பம் எகிப்து நாட்டில் மேற்கொண்ட பயணப்பாதையை வடிவமைக்கும் முயற்சி துவங்க உள்ளதென்று, Adel al Gindy அவர்கள் கூறினார்.

மன்னன் ஏரோதின் கொலைவெறியிலிருந்து தப்பிக்க, புனித யோசேப்பு, அன்னை மரியாவோடும், குழந்தை இயேசுவோடும் எகிப்து நாட்டிற்குத் தப்பித்துச் சென்ற வேளையில், அங்கு, அவர்கள் பயணித்த "திருக்குடும்பத்தின் பாதை" என்று பாரம்பரியமாக அழைக்கப்படும் இந்த பாதை, 25 இடங்களை இணைக்கும், 3,500 கி.மீ. தூரம் கொண்ட ஒரு பாதை என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

நைல் நதி கடலில் கலக்கும் ஆற்றுப்படுகை பகுதியில் துவங்கும் இந்த பாதை, எகிப்து நாட்டின் மேற்குப் பகுதியில் நிறைவுறுகிறது என்றும், உலகில் உள்ள அனைத்து திருப்பயணப் பாதைகளில் இதுவே மிக நீளமான பாதை என்றும் கூறப்படுகிறது.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டு பிரதிநிதிகளையும், உரோம் மறைமாவட்டத்தின் திருப்பயணிகள் அமைப்பின் பிரதிநிதிகளையும், 2017ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரை நேரத்தில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

06 January 2021, 15:46