தேடுதல்

Vatican News
தென் கொரியா தென் கொரியா  (ANSA)

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் சூழலியலில் அக்கறை

உலகெங்கும் சமுதாய வாழ்வை, தொடர்ந்து பாதித்துவரும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு, மனிதர், சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்படுத்திய சேதமே காரணம் – தென் கொரிய கிறிஸ்தவ சபைகள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 18 இத்திங்கள் முதல், 25 வருகிற திங்கள் வரை, சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில், உலகின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர், தென் கொரியக் கிறிஸ்தவர்கள்.

தென் கொரியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் நடைபெறும் அனைத்து இறைவேண்டல் கூட்டங்கள் மற்றும், கருத்தரங்குகளில், சுற்றுச்சூழல்  பாதுகாப்பை வலியுறுத்த, அந்நாட்டு கத்தோலிக்கரும், மற்ற கிறிஸ்தவ சபையினரும் தீர்மானித்து, அதை செயல்படுத்தி வருகின்றனர்.

தென் கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை, கொரிய தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவை மற்றும், கொரிய ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அச்பைகள் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள், ஆண்டவரிடம் எவ்வளவு நெருக்கமாக வருகின்றார்களோ, அந்த அளவிற்கு, அவர்கள், தங்களுக்கு இடையே நிலவும் புரிந்துகொள்ளாமைகளை மேற்கொள்ளமுடியும் என்று கூறியுள்ள அவ்வறிக்கையில், இயேசுவில் நிலைத்திருக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் சமுதாய வாழ்வைத் தொடர்ந்து பாதித்துவரும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு, மனிதர், சுற்றுச்சூழல் அமைப்பிற்கு  ஏற்படுத்திய சேதமே காரணம் என்றும், படைப்பைப் பாதுகாக்கவேண்டும் என்ற கடவுளின் ஆணையை நிறைவேற்றுவதற்கு, நாம், சூழலியலைப் புண்படுத்தக்கூடாது என்றும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இயற்கைச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்கு, ஒன்றிணைந்து செயல்படவேண்டியது, கிறிஸ்தவர்கள் அனைவரின் பொறுப்பு என்பதையும், அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தென் கொரியாவின் ஏறத்தாழ 5 கோடியே 18 இலட்சம் மக்களில், 11 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் மற்றும், பெரும்பான்மையினோர் பிற கிறிஸ்தவ சபையினர்.

தென் கொரியாவில், 1900களில் ஒரு விழுக்காடாக இருந்த கிறிஸ்தவம், 2010ம் ஆண்டில் 29 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதற்கு மறைப்பணியாளர்களே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

20 January 2021, 15:10