தேடுதல்

கந்தமால் மறைசாட்சிகளை அருளாளர்களாக அறிவிக்கும் பணி கந்தமால் மறைசாட்சிகளை அருளாளர்களாக அறிவிக்கும் பணி 

கந்தமால் மறைசாட்சிகளை அருளாளர்களாக அறிவிக்கும் பணி

ஒடிசாவில் 2008ம் ஆண்டில் இந்துமதத் தலைவர் Swami ‎Lakshmanananda Saraswati அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் பொறுப்பேற்றதையும் விடுத்து, இந்துமதத் தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2008ம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளை, அருளாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கென, மறைமாவட்ட அளவிலான பணிகளைத் துவக்கி வைத்துள்ளார், பேராயர் ஜான் பார்வா. 

கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள இந்த பணிகள் பற்றி, ஆசியச் செய்தியிடம் விளக்கிய, அருள்பணி Purushottam Nayak அவர்கள், இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட மறைசாட்சிகளின் பெயர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த மறைசாட்சிகளில் இணைக்கப்பட்டுள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும், பலரும், கந்தமாலில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில், கிறிஸ்தவர்களுக்கு உதவியதால் கொல்லப்பட்டனர் என்றுரைத்த அருள்பணி Nayak அவர்கள், அன்பின் காரணமாக, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த, கத்தோலிக்கர் அல்லாதவர்களையும், ஒடிசா தலத்திருஅவை மதிப்பளிக்க விரும்புகின்றது என்று எடுத்துரைத்தார். 

மறைமாவட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பணியில், தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பதற்கென்று, ஆறு பேர் கொண்ட குழு, அருள்பணியாளர்களுக்கு உதவி வருகின்றது என்றும், அருள்பணி Nayak அவர்கள் கூறினார்.

அந்த வன்முறையில் தங்களின் கணவர்களை இழந்த கைம்பெண்களையும், அதில் தப்பிப் பிழைத்தவர்களையும், தனித்தனியாகவும், அவர்களின் குடும்பங்களோடும் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், அருள்பணி Nayak அவர்கள் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, இந்துமதத் தலைவர் Swami ‎Lakshmanananda Saraswati அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் பொறுப்பேற்றதையும் விடுத்து, இந்துமதத் தீவிரவாதிகள், ஆகஸ்ட் 25ம் தேதி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.

அந்த வன்முறையில், பழங்குடி இன மக்கள், மற்றும், தலித் கிறிஸ்தவர்களின் 395 ஆலயங்கள் மற்றும், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. குறைந்தது நூறு பேர் கொல்லப்பட்டனர். நாற்பது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர், பள்ளிகள், சமுதாயநல மையங்கள், நலவாழ்வு மையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டன. 75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர். பலர், இந்து மதத்தைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2021, 14:18