தேடுதல்

Vatican News
மரணதண்டனைக்கு எதிர்ப்பு மரணதண்டனைக்கு எதிர்ப்பு 

மரணதண்டனையை ஒழிக்க, கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு முயற்சி

மரணதண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதில் கஜக்ஸ்தான் நாட்டோடு 2006ம் ஆண்டு முதல் ஒன்றிணைந்து உழைத்து வரும் சான் எஜிதியோ அமைப்பின் வெற்றி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மரணதண்டனை தடைச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கஜக்ஸ்தான் அரசு, சனவரி 2, இச்சனிக்கிழமை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது, சான் எஜிதியோ எனும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

மரணதண்டனையை அகற்றவேண்டும் என்ற நோக்கத்தில், 2003ம் ஆண்டிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டுவரும் கஜக்ஸ்தான் நாட்டில், பெரிய குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குவதை அனுமதித்தபோதிலும், தற்போது, அவை அனைத்தும், ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளன.

மரணதண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதில் கஜக்ஸ்தான் நாட்டோடு 2006ம் ஆண்டு முதல் ஒன்றிணைந்து உழைத்துவரும் சான் எஜிதியோ அமைப்பு, வாழ்வைப் பாதுகாப்பதில், இந்நாடு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை நடவடிக்கையாளர் Tamara Chikunova அவர்கள், 'மரணதண்டனைகள், மற்றும், சித்ரவதைகளுக்கு எதிரான அன்னையர்' என்ற தன் அமைப்பின் துணைகொண்டு, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கீழிருந்த மத்திய ஆசிய நாடுகளில், மரணதண்டனைகள் ஒழிக்கப்பட பாடுபட்டுவந்துள்ளதையும் பாராட்டியுள்ளது, கத்தோலிக்க சான் எஜிதியோ அமைப்பு.

04 January 2021, 14:10