தேடுதல்

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிராக கண்ணீர் புகைக் குண்டுகள் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிராக கண்ணீர் புகைக் குண்டுகள் 

விவசாயிகளின் பேரணியின்போது நடத்தப்பட்ட வன்முறைக்கு கண்டனம்

இந்திய அரசு அதிகாரிகள், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், விவிசாயிகள் நடத்திய பேரணியின்போது, நிலைமை கட்டுப்பாட்டை மீறிச்சென்றிருக்காது - இந்திய ஆயர் பேரவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 26, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, இந்தியாவின் 72வது குடியரசு நாளன்று, புதுடெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது இடம்பெற்ற வன்முறைக்கு, இந்திய திருஅவைத் தலைவர்கள், தங்களின் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, காவல்துறையினர், இரும்புத் தடிகள் மற்றும், கம்புகளைக் கொண்டுத் தாக்கியுள்ளதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியுள்ளனர். இந்த வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றும், காவல்துறையினர் உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமுற்றுள்ளனர்.

புதுடெல்லியில் நடத்தப்பட்ட பேரணியின்போது விபத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பம், மற்றும், போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு, ஆயர்கள் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருப்பதாக, இந்திய ஆயர் பேரவையின் தொழிலாளர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி யூஜின் பெரேரா அவர்கள் கூறியுள்ளார். 

அதோடு, அந்த மூன்று வேளாண் சட்டங்களை, நடுவண் அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய ஆயர்கள் ஆதரவளிக்கின்றனர்  என்றும், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார், அருள்பணி யூஜின் பெரேரா.

அரசு அதிகாரிகள், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், நிலைமை கட்டுப்பாட்டை மீறி, சென்றிருக்காது என்றும் கூறியுள்ள அருள்பணி பெரேரா அவர்கள், இந்த வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது மற்றும், பலர் காயமடைந்திருப்பது கவலை தருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் 130 கோடி மக்களுள், எழுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், வேளாண்மையைச் சார்ந்து வாழ்கின்றனர். வேளாண்மையை, நேரிடையாக அல்லது, அதைச் சார்ந்து வாழும் இந்த மக்களுள், ஏறத்தாழ எண்பது விழுக்காட்டினர், இரண்டு ஹெக்டேர் நிலத்திற்கும் குறைவாகக் கொண்டிருப்பவர்கள்.  

மேலும், இந்திய நடுவண் அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலாளர்கள் மற்றும், பொதுமக்கள் அமைப்புகள், அந்நாட்டின் 12 இடங்களில் பேரணிகளை நடத்தியுள்ளனர். (UCAN/AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2021, 15:14