தேடுதல்

Vatican News
உலக அமைதிக்காக ஊர்வலம் மேற்கொண்டுள்ள மக்கள் உலக அமைதிக்காக ஊர்வலம் மேற்கொண்டுள்ள மக்கள்  (ANSA)

இங்கிலாந்து, மற்றும், வேல்ஸின் அமைதி ஞாயிறு

திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி குறித்து விவாதிக்க, ஒரு ஞாயிறை, ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கும் இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்கறை எனும் கலாச்சாரமே, அமைதிக்கு வழி, என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய  புத்தாண்டு அமைதி நாள் செய்தியை மையமாக வைத்து, இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் திருஅவை, சனவரி 17, இஞ்ஞாயிற்றுக் கிழமையன்று, அமைதி ஞாயிறை சிறப்பித்தது.

நாடுகள், இராணுவத்திற்கென அதிகம் செலவழிப்பதற்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும், அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கத்தோலிக்க Pax Christi அமைப்பின் உதவியுடன் இங்கிலாந்து, மற்றும், வேல்ஸின்  அனைத்து பங்குத்தளங்கிலும் இந்த அமைதி ஞாயிறு  சிறப்பிக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் சனவரி மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையன்று  திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தியை ஆழ்ந்து சிந்திப்பதற்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த அமைதி ஞாயிறன்று, பங்குதளங்களுக்கும் பள்ளிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் Pax Christi கத்தோலிக்க அமைதி அமைப்பு வழங்கியுள்ளது

இந்த கோவிட்-19 காலத்தில் அனைத்து தலைவர்களும் கத்தோலிக்க சமூகப் படிப்பினைகளின் துணையோடு ஒரு மனிதாபிமானமிக்க வருங்காலத்தை வடிவமைத்துக் கொடுக்க உதவவேண்டும் என அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி குறித்து விவாதித்த, இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் கத்தோலிக்க பங்குத்தளங்களும், பள்ளிகளும், சமுதாய அநீதிகளை களைய, குடும்ப, சமுதாய, அரசியல், மற்றும், நிறுவன அளவில் அனைவரின் பங்கேற்பையும் வலியுறுத்தினர்.

இங்கிலாந்து மற்றும், வேல்ஸில் சிறப்பிக்கப்பட்ட அமைதி ஞாயிறு குறித்து கருத்துக்களை வெளியிட்ட இங்கிலாந்தின் Pax Christi தேசிய தலைவர் பேராயர் Malcolm McMahon அவர்கள் பேசுகையில், ஒப்புரவு, நீதி, மற்றும், வன்முறையற்ற வழிகளில், அமைதியின் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்ல, அனைத்துக் கத்தோலிக்கர்களும் உழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

18 January 2021, 14:56