தேடுதல்

Vatican News
Owerri உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் Moses Chikwe Owerri உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் Moses Chikwe  

நைஜீரியாவில் கடத்தப்பட்டிருந்த ஆயர் Chikwe விடுதலை

நைஜீரியாவில், ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால், கடந்த டிசம்பர் 27ம் தேதி கடத்தப்பட்ட, ஆயர் Moses Chikwe அவர்களும், அவரது வாகன ஓட்டுனர் Ndubuisi Robert அவர்களும், சனவரி 01, இவ்வெள்ளி இரவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நைஜீரியா நாட்டில், ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால், கடந்த டிசம்பர் 27ம் தேதி கடத்தப்பட்ட, Owerri உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் Moses Chikwe அவர்களும், அவரது வாகன ஓட்டுனர் Ndubuisi Robert அவர்களும், இவ்வெள்ளி இரவில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் தென்கிழக்கேயுள்ள Owerri உயர்மறைமாவட்டம், சனவரி 01, இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியின்படி, இவ்விருவரும், எவ்விதப் பிணையல்தொகையும் இன்றி, கடத்தியவர்களால், இவ்வெள்ளியன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

இந்த விடுதலை குறித்து வத்திக்கான் செய்தித் துறையிடம் பேசிய, Owerri உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Anthony Obinna அவர்கள், டிசம்பர் 27ம் தேதி ஞாயிறு மாலையில் கடத்தப்பட்ட இவர்கள் இருவரும், 2021ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று, இரவு பத்து மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

கடவுளுக்கு நன்றிகூறும் இதயத்தோடு, இறைமக்களுக்கும், நன்மனம் கொண்ட எல்லாருக்கும் இச்செய்தியை அறிவிக்கிறேன் எனவும், 53 வயது நிறைந்த ஆயர் Moses Chikwe அவர்களை, தான் நேரில் சென்று சந்தித்தாகவும் கூறிய பேராயர் Obinna அவர்கள், வாகன ஓட்டுனருக்கு கையில் ஆழமான வெட்டுக்காயம் இருந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்றும் கூறினார்.

மேலும், டிசம்பர் 27, கடந்த ஞாயிறன்று நைஜீரியா நாட்டின் Owerri உயர் மறைமாவட்டத்தில் துணை ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் Moses Chikwe அவர்களும், அவரது காரோட்டியும் ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, அவர்களுக்காக செபிக்கும்படி, சனவரி 1, புத்தாண்டு நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில்  விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நைஜீரியாவில் கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் பல அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் தங்களைச்சுற்றி காவல் படையை அதிகரித்துள்ளதும், தங்கள் வாகனங்களில் கறுப்புக் கண்ணாடிகளைப் பொருத்துவதும் நிகழ்ந்துவருகின்றன என்றும், இந்த வசதிகள் இல்லாத திருஅவை பணியாளர்களும், சாதாரண மக்களும் கடத்தல் காரர்களின் இலக்காக மாறுகின்றனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

02 January 2021, 15:06