தேடுதல்

Vatican News
பால்கன் பகுதியின் கடும் குளிரில் குடியேற்றதாரர்கள் பால்கன் பகுதியின் கடும் குளிரில் குடியேற்றதாரர்கள்  (AFP or licensors)

பால்கன் பகுதி கடும் குளிரில் வாடுவோருக்கு காரித்தாஸ் உதவி

போர், சித்ரவதை, ஏழ்மை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில், முகாம்களில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் குளிரிலிருந்து தப்புவதற்கு காரித்தாஸ் உதவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பால்கன் பகுதியின் கடும் குளிரில் ஆயிரக்கணக்கான குடியேற்றதாரர்களும், புலம்பெயர்ந்தோரும் வாடிவரும் வேளையில், அவர்களுக்கு உதவிகளை ஆற்றிவருகிறது காரித்தாஸ் அமைப்பு.

போஸ்னியா ஹெர்சகொவினா நாட்டில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், குளிரில் வாடிவரும்வேளையில், அவர்களின் உதவிகளுக்காக ஐக்கிய நாடுகள் நிறுவனமும் விண்ணப்பங்களை முன்வைத்துள்ள நிலையில், குளிரிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான விறகுகளையும், அடிப்படை உணவுப்பொருட்களையும் அனுப்பி உதவியுள்ளது, கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான காரித்தாஸ்.

போர், சித்ரவதை, ஏழ்மை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில், முகாம்களில் வாழ்ந்துவரும் 2,500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், தற்போது, கடும் பனிப்பொழிவின் காரணமாக, குளிரில் வாடி வருவதாகக் கூறும், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அடைக்கலம் தேடி, பலர், பல மைல் தூரம் நடக்கவேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கிறது.

போஸ்னியாவின் இராணுவத்தினர், புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்கென 20 தற்காலிக முகாம்களை அமைத்துள்ளபோதிலும், குளிரைத் தாங்கும் வசதிகள் செய்யப்படாமையால், அவை, இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்னியாவில் புலம்பெயர்ந்தவர்களாக வாழும், தென் ஆசியா, ஆப்ரிக்கா, மற்றும், மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்களின் வருங்காலக் கனவுகள் நிறைவேற்ற முடியாத தூரத்தில் இருப்பதால் மனம் தளர்ந்து போயிருப்பதாகவும் காரித்தாஸ் அமைப்பு தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

11 January 2021, 15:03