தேடுதல்

Vatican News
ஈராக் கத்தோலிக்கர்கள் ஈராக் கத்தோலிக்கர்கள்  (AFP or licensors)

ஈராக்கில் அமைதி நிலவ, உலகம் நலம்பெற, இறைவேண்டல்

இறைவன் அனைவருக்கும் உரியவர் என்பதால், அனைத்து மக்களுக்கும் தேவையான அமைதிக்கும், கொள்ளை நோய் முடிவுக்கும் செபிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக்கில் அமைதி நிலவவேண்டும் என்ற நோக்கத்தில், தலத்திருஅவையால் நடத்தப்படும் மூன்று நாள் இறைவேண்டல், உண்ணாநோன்பு, மற்றும், அமைதி முயற்சிகளில் அனைவரும் பங்கேற்குமாறு, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

சனவரி 21ம் தேதி, கடந்த வியாழனன்று, பாக்தாத்தில் இடம்பெற்ற இரண்டு வெடிகுண்டு விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ள நிலையில், சனவரி 25 இத்திங்கள் முதல், மூன்று நாள் உண்ணா நோன்பு, மற்றும், இறைவேண்டல் நாட்களை தலத்திருஅவை கடைப்பிடித்துவருவதாக உரைத்த கர்தினால் சாக்கோ அவர்கள், 'நினிவேயின் உயிர்ப்பு' என்ற பெயரில் இடம்பெறும் இம்முயற்சி, அமைதிக்கும், கோவிட்-19 பெருந்தொற்றின் முடிவுக்கும் இறைவனை நோக்கி வேண்டுவதாக இருக்கிறது என்றார்.

இந்த மூன்று நாட்களிலும், நண்பகல், அல்லது, மாலைவரை உண்ணா நோன்பு இருக்கவும், சிறப்பு செப வழிபாடுகளிலும், திருப்பலிகளிலும் பங்கேற்கவும் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், இறைவன் அனைவருக்கும் உரியவர் என்பதால், அனைத்து மக்களுக்கும் தேவையான அமைதிக்கும், பெருந்தொற்றின் முடிவுக்கும் செபிக்கவேண்டியது, கிறிஸ்தவர்களின் கடமை என்பதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

8ம் நூற்றாண்டில் நினிவே பகுதியை பெருந்தொற்று தாக்கியபோது, எசேக்கியேல் இறைவாக்கினர், அந்நோயை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் மூன்று நாள் உண்ணா நோன்பிற்கு அழைப்பு விடுத்ததையும் நினைவூட்டியுள்ளார் கர்தினால் சாக்கோ.

நினிவே மக்கள், யோனாவின் குரலுக்குச் செவிமடுத்ததுபோல், அனைவரும் இறைகுரலுக்குச் செவிமடுப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால் சாக்கோ அவர்கள், பல கோடி மக்களின் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பெருந்தொற்று முடிவுக்கு வரவும், ஈராக்கில் அமைதி நிலவவும், திருத்தந்தையின் மார்ச் மாத (மார்ச் 5 முதல் 8 வரை) திருத்தூதுப் பயணம் வெற்றிபெறவும், ஒன்றிணைந்து செபிப்போம் என விண்ணப்பித்துள்ளார்.

பாக்தாத்தின் Tayaran வளாக சந்தைப் பகுதியில் இம்மாதம் 21ம் தேதி ஒருவர் நோயாளிபோல் நடித்து, தனக்கு உதவி செய்ய வந்த மக்கள் கூட்டத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய, அந்த வெடிகுண்டு விபத்தில் காயமுற்றோருக்கு உதவிசெய்து கொண்டிருந்த மக்கள் மீது, இன்னொருவர் வெடிகுண்டை வெடிக்க வைக்க என, இருவர் மனித வெடிகுண்டாகச் செயல்பட்டு, 32 பேரின் உயிரிழப்புக்கும், 100க்கும் மேற்பட்டோர் காயமுறுதலுக்கும் காரணமாகியுள்ளனர்.

26 January 2021, 15:09