தேடுதல்

Vatican News
கர்தினால் Eusébio Oscar Scheid கர்தினால் Eusébio Oscar Scheid  

இறையடி சேர்ந்த பிரேசில் கர்தினால் Eusébio Oscar Scheid

சனவரி 13, இப்புதனன்று, பிரேசில் நாட்டில், கர்தினால் Eusébio Oscar Scheid அவர்கள், தன் 88வது வயதில் இறையடி சேர்ந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 13, இப்புதனன்று, பிரேசில் நாட்டில், கர்தினால் Eusébio Oscar Scheid அவர்கள், தன் 88வது வயதில் இறையடி சேர்ந்தார் என்பதை, அந்நாட்டின் São José dos Campos மறைமாவட்டம் அறிவித்தது.

1932ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்த Oscar Scheid அவர்கள், இயேசுவின் திரு இருதய அருள்பணியாளர்கள் துறவு சபையில் இணைந்து, 1960ம் ஆண்டு, அவரது 28வது வயதில் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.

உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் தன் இறையியல் கல்வியை நிறைவுசெய்த Oscar Scheid அவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட São José dos Campos மறைமாவட்டத்திற்கு, முதல் ஆயராக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு பிரேசில் நாட்டின் Rio de Janeiro உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்ற, Oscar Scheid அவர்கள், 2003ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

60 ஆண்டுகள், அருள்பணித்துவ வாழ்விலும், 39 ஆண்டுகள், ஆயராகவும் பணியாற்றிய கர்தினால் Oscar Scheid அவர்கள், 2009ம் ஆண்டு, தன் 77வது வயதில் பணிஓய்வு பெற்றார்.

கோவிட்-19 கிருமியால் உடல் நலன் பாதிக்கப்பட்டு, São Francisco மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்தினால் Oscar Scheid அவர்கள், சனவரி 13, இப்புதனன்று, தன் 88வது வயதில் நிறையமைதி அடைந்தார்.

கர்தினால் Eusébio Oscar Scheid அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்கத் திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை 227 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதிபெற்ற 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 128 ஆகவும் உள்ளன.

தற்போதைய கர்தினால்களின் அவையில், துறவு சபைகளைச் சேர்ந்த கர்தினால்களின் எண்ணிக்கை 50 என்பதும், இவர்களில் 29 பேர், திருத்தந்தையைத் தேர்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் என்பதும், கர்தினால் Eusébio Oscar Scheid அவர்களின் மறைவையடுத்து, இயேசுவின் திரு இருதய அருள்பணியாளர்கள் துறவு சபையின் உறுப்பினர்கள் யாரும் கர்தினால்கள் அவையில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.

இதற்கிடையே, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் மற்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரின் தர்மப்பணிகளை ஒருங்கிணைத்து வந்த பேராயர், Oscar Rizzato அவர்கள், சனவரி 11 இத்திங்களன்று, தன் 92வது வயதில், இத்தாலியின் பதுவை நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறையடி சேர்ந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 January 2021, 14:23