தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Timothy Dolan அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Timothy Dolan  (ANSA)

மனித மாண்பின் அடித்தளமாக, சமய சுதந்திரம்

மத விவகாரங்களில் அரசின் தலையீட்டை நீக்கும் Virginia மத விடுதலை விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சமய சுதந்திர நாள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கென்று போட்டியிடும் இன்றைய உலகில், மனித மாண்பின் அடித்தளத்தில்  சமய சுதந்திரம் தன் ஆணிவேரைக் கொண்டுள்ளது என்பதை, ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Timothy Dolan.

இம்மாதம் 16ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறப்பிக்கப்பட்ட சமய சுதந்திர நாள் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்ட, அந்நாட்டு மத விடுதலைக்கான ஆயர் பேரவை குழுவின் தலைவர், கர்தினால் டோலன் அவர்கள், உண்மையை அப்படியே அதன் இயல்பு நிலையோடு நோக்குவதற்கான அழைப்பு, இன்றைய சமுதாயத்தில், அடக்குமுறைக்கான முயற்சியாக நோக்கப்படுவது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

வருங்காலம் வேண்டுமெனில், இன்றைய சமுதாயம், மனிதமாண்பு குறித்த உண்மைகளை ஏற்று, அதற்கு தன்னை உட்படுத்துவதோடு, உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Fratelli tutti என்ற தன் திருமடலில் குறிப்பிட்டுள்ளதையும், கர்தினால் டோலன் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரையாடலுக்கான இடத்தை மத விடுதலை விரிவுபடுத்துகின்றது என்பதை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ள கர்தினால் டோலன் அவர்கள், உரையாடலுக்குரிய இடம் சுருங்கும்போது, சமுதாயம் துன்புறுகிறது என்பதை மனதில் கொண்டவர்களாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கர்களும், அனைத்து மக்களும், அனைவருக்குமுரிய மத விடுதலையை மதிக்கும் பாரம்பரியத்தை காக்க, தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மத விவகாரங்களில் அரசின் தலையீட்டை நீக்கும் Virginia மத விடுதலை விதிமுறை, 1786ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் விதமாக, 1993ம் ஆண்டு, சமய சுதந்திர நாள் உருவாக்கப்பட்டது.

19 January 2021, 14:27