தேடுதல்

கர்தினால் Joseph Coutts கர்தினால் Joseph Coutts  

பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆய்வு மையத்தின் தலைவராக, கர்தினால் கூட்ஸ்

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிடையே உறவுகளை பலப்படுத்தவும், கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பை உருவாக்கவும், தொடர்ந்து உழைத்துவருகிறார், கர்தினால் ஜோசப் கூட்ஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ ஆய்வு மையத்தின் தலைவராக அந்நாட்டு கர்தினால் Joseph Coutts அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவை, மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபையினரின் ஆதரவுடன் ராவல்பிண்டியில் நடத்தப்படும், கிறிஸ்தவ ஆய்வு மையத்தின் தலைவராக, கராச்சி பேராயர், கர்தினால் கூட்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, பொருத்தமான ஒன்று என, கிறிஸ்தவ தலைவர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிடையே உறவுகளை பலப்படுத்தவும், கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பை உருவாக்கவும், தொடர்ந்து பல ஆண்டுகளாக தனிப்பட்ட விருப்பார்வத்துடன் கர்தினால் கூட்ஸ் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்களுடனும், ஏனைய மத நம்பிக்கையாளர்களுடனும், நல்லுறவையும், புரிந்துகொள்ளும் தன்மையையும், ஒத்துழைப்பையும், அமைதியான இணைக்க வாழ்வையும் உருவாக்கும் நோக்கத்தில், 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டுவரும் இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆய்வு மையம், கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவுகளை ஆய்வு செய்யும் முக்கிய மையமாகவும் இயங்கி வருகிறது.

பாகிஸ்தானில் கிறிஸ்தவ மெய்யியலை வளர்க்கும் ஆய்வுகள், அமைதியை உருவாக்கும்  நடவடிக்கைகள், மனிதகுல, மற்றும், சிறுபான்மை உரிமைகளுக்கு குரல் எழுப்புதல், போன்றவைகளில் திட்டங்களை வகுத்து செயலாற்றி வருவதுடன், மத சகிப்பற்ற தன்மைகள், மற்றும், வன்முறைகள் அதிகரிப்பு குறித்த ஆய்வையும் கிறிஸ்த ஆய்வு மையம் நடத்திவருகின்றது.

ஒத்துழைப்பு நடவடிக்கைகள் வழியாக மதங்களிடையே அமைதியான இணைக்க வாழ்வை ஊக்குவித்துவரும் இந்த கிறிஸ்தவ ஆய்வு மையம், மதத்தலைவர்கள்,வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், சமூகத் தொடர்பாளர்கள், அரசு நிர்வாகிகள், பாராளுமன்ற அங்கத்தினர்கள், பெண்கள், மற்றும், இளையோர் அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2021, 15:10